யாழ் பல்கலைகழக மாணவர்களிற்கு விசேட அறிவித்தல்

கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பல்கலைகழக மாணவர்களையும் உடன் விடுதலை செய்ய, அனைவரும் ஒருமித்து செயற்பட வேண்டுமென பல்கலைகழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

அறிக்கையில் மேலும்..

அண்மையில் இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற படுகொலை துயரங்களை அடுத்து நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் காணப்பட்டது.

அந்த வகையில் கடந்த 03/05/2018 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சோதனைகளில் மாணவர் ஒன்றிய அலுவலகத்தில் விடுதலைப்புலிகளின் தலைவரின் படம் மற்றும் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பிற்கு எதிரான போராட்டங்களில் பயன்படுத்தப்பட்ட பதாகைகள் என்பன காணப்பட்டதனைக் காரணமாக்கி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் N.திவாகரன், செயலாளர் S.பபிலராஜ் மற்றும் மருத்துவபீட வளாகத்தில் உள்ள சிற்றுண்டிச் சாலையில் காணப்பட்ட படமொன்றை காரணம் காட்டி சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகியோர் பாரதூரமான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தகைய படங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் இவ்விடங்களில் வைக்கப்பட்டவையாகும். ஆனாலும் யுத்தம் நிறைவடைந்து கடந்த பத்தாண்டு காலத்தில் இலங்கையிலுள்ள அனைத்து இன மாணவர்களும் இன பேதங்களை கடந்து நட்புறவுடன் பழகக்கூடிய நிலை காணப்பட்டது.

எமது நாட்டில் எவ்வாறான இனமுரண்பாடுகள் தோன்றும் நிலையிலும் எமது மாணவர்களின் ஒற்றுமையில் எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. இலங்கையின் எதிர்காலத்தில் நல்லிணக்கத்திற்கான அடித்தளமாகவே எமது பல்கலைக்கழக கல்வியை நோக்கினோம்.

ஆனாலும் எமது பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பல்கலைக்கழகத்தை விரைவில் தொடங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்க வந்த இராணுவம் எப்போதோ வைக்கப்பட்ட படங்களைக் காரணம் காட்டி இவர்களை கைது செய்திருப்பது எம் மாணவர்களிடையே ஒற்றுமையைச் சீர்குலைக்குமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது.

எமது பல்கலைக்கழக வரலாற்றில் இதுவரையிலும் அனுமதியுடன் இராணுவம் உட்பிரவேசித்திருக்கவில்லை. இருந்தும் எமது மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு பல்கலைக்கழக நிர்வாகமும், மாணவரொன்றியமும் பூரண ஒத்துழைப்பினை வழங்கியிருந்தோம்.

ஆனாலும் எமது பாதுகாப்பை உறுதிப்படுத்தவென வந்த இராணுவம் அப்பாவி மாணவர்களையும், சிற்றூண்டிச்சாலை நடத்துனரையும் கைது செய்திருப்பது மாணவர்களிடையே இராணுவத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் மலினப்படுத்தியுள்ளது

பல்கலைக்கழகத்தின் சீரான செயற்பாட்டினை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றூண்டிச் சாலை நடத்துனர் ஆகியோரின் விடுதலையே சாத்தியமாக்கும். அந்தவகையில் ஒட்டுமொத்த யாழ் பல்கலைக்கழக சமூகத்தினதும் நலனைக் மருத்திற் கொண்டு உரியவர்கள் இவர்களின் விடுதலையில் கரிசனை செலுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டிருந்தது.