சிலாபத்தில் என்ன நடந்தது? திடீரென்று வானத்தை நோக்கிச் சுட்ட பொலிஸார்!

இலங்கையின் வட மேற்கே புத்தளம் மாவட்டம் சிலாபத்தில் இன்று ஏற்பட்ட குழு வன்முறை காரணமாக உடன் அமுலுக்கு வரும்வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் பரவிய தகவல் ஒன்றே இந்த வன்முறை நிலைக்கு காரணம் என தற்போது கிடைத்த செய்தி கூறுகிறது.

தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெறப்போவதாக முகநூலில் பரவிய செய்திகளையடுத்து அதன் உண்மைத் தன்மையை கூறுமாறு கோரி சிலாபத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தால் அவ்விடத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து பொலிஸ் நிலையம் அருகில் வந்த இளைஞர் குழு இந்த செய்தியின் உண்மைத் தன்மையை கூறுமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்தது. இதன் பின்னர் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

இதனைத்தொடர்ந்து பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு ஆர்ப்பாட்டக்காரரைக் கலைத்ததுடன் இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அங்கு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

எவ்வாறாயினும் தற்போது அவ்விடத்தில் ஊரங்கு சட்டம் நாளை காலை 6 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.