நாங்களும் பதவி விலகுவோம்! ரிஷாட்டின் சகாக்கள்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் அவர் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகுவார்.

நாங்களும் பதவிகளிலிருந்து விலகுவோம் என அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற செயல் நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் சட்டத்தின் கட்டளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக 10 குற்றச்சாட்டுக்களை தெரிவித்து எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை சமர்ப்பித்திருக்கின்றார்கள.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்ததாக தெரிவித்தே இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

இந்த குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் தனது அமைச்சு பதவியில் இருந்து விலகுவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்திருக்கின்றார். அதேபோன்று அவரது தலைமையின் கீழ் இருக்கும் நாங்களும் விலகுவோம்.

அத்துடன் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆராய்வதாக பிரதமரும் தெரிவித்திருக்கின்றார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலில் கிறிஸ்தவ மக்களே பாதிக்கப்பட்டனர். என்றாலும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எந்த கிறிஸ்தவ உறுப்பினரும் முஸ்லிம் சமுகத்துக்கு எதிராகவோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவோ விரல்நீட்டவில்லை. ஆனால் வேறு சில உறுப்பினர்கள் எமக்கு எதிராக குற்றம் சாட்டி வந்தனர்.

அத்துடன் முஸ்லிம் சமூகம் பல வன்முறைகளை சந்தித்திருக்கின்றது. அப்படியான எந்த காலத்திலும் நாங்கள் யார் மீதும் விரல் நீட்டவில்லை என்றார்.