விடுதலைப் புலிகளையோ அல்லது பிரபாகரனையோ குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை!

விடுதலைப் புலிகளையோ அல்லது தலைவர் பிரபாகரனையோ குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை என தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி ஒரு சில அரசியல்தலைமைகள் மேற்கொண்ட நடவடிக்கையினாலேயே நாட்டில் பாதுகாப்பில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “விடுதலைப் புலிகளையே அல்லது தலைவர் பிரபாகரனையே குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை. ஏனென்றால் அவர்கள் ஒரு கொள்கையுடன் போராடினார்கள். அவரை நம்பி பல உறுப்பினர்கள் இருந்தார்கள். அவ்வாறான நிலையில் அவர்களைக் குற்றம் சாட்டுவதில் அர்த்தம் இல்லை.

குற்றத்தைத் தடுக்கவேண்டிய இவர்களே மௌனமாக இருந்தார்கள். நான் என்னால் முடிந்தளவுக்கு அரசாங்கத்துடனும் ஏன் விடுதலைப்புலிகளின் தலைவருடனும் கடிதம் மூலமாகப் பல கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றேன்.

ஆட்சியிலிருந்த அரசாங்கத்துடன் கூட நேரடியாக இறுதி யுத்தத்தில் அகப்பட்டிருந்த மக்களின் விபரங்களை எடுத்துக்கூறினேன். அதற்காகப் பல அச்சுறுத்தல்கள் கூடிருந்தன. இவ்வாறான நிலைமைகளில் கூட வாய்திறக்காது இருந்தவர்கள் இன்று முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுக்கின்றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்போது அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுக்கத் தொடங்கியதே அன்று முதல் இன்று வரை யாரும் எதனையும் எங்கும் கொண்டு செல்லலாம் என்ற நிலைதான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வரை இடம்பெற்றுள்ளது. பத்தாண்டுகளாக இல்லாத நிலையை இஸ்லாமிய அடிப்படைவாதத் தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு ஆளும் கட்சி எதிர்க் கட்சியிலுள்ள அத்தனை பேரும்தான் குற்றவாளிகள் கல்வி மான்கள் ஊடகவியலாளர்கள் சமூக சேவையாளர்கள் என்ன செய்கின்றார்கள். நாடு அழிந்துகொண்டு போகின்றது.

இந்த நாட்டில் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இந்த நாட்டில் என்ன நடந்தாலும் எமக்கு உதவி செய்யவருவது இந்தியாதான் அங்குத் தனது மக்களைப் பார்ப்பதிலும் பார்க்க எங்களுக்கு உதவி செய்ய உடனே வருவார்கள்.

இந்த நாடு ஆபத்திலிருக்கின்றபோது அருகிலுள்ள இந்தியாவுக்குச் செல்லாமல் அமைச்சர்களும் ஜனாதிபதியும் ஒன்றிணைந்து சீனாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்வதற்கு முடிவெடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சீனாவிற்குச் சென்று ஒப்பந்தம் செய்கின்றார்.

யுத்த்திற்குப் பின்னரான காலத்தில் கடந்த அரசங்கம் விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்ட நகைகள் பணம் போன்றவற்றை தமது இறுதிக் காலத்தில் மக்களுக்குக் கொடுத்திருந்தார்கள்.

இதன்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோதும் அந்தப் பணம் நகைகளுக்கு என்ன நடந்தது. இதனைக்கூடக் கேட்கமுடியாதவர்களாக இருக்கின்றார்.

அரசாங்கத்திற்காக வக்காலத்து கொடுக்கும் இவர்கள் உட்பட அனைத்து பிரதிநிதிகளையும் மாற்றி மக்களுக்குச் சேவை செய்யக்கூடியவர்களை அடையாளப்படுத்தக்கூடிய வழிவகைகளைச் செய்யவேண்டும். இதற்கு மக்கள் அனைவரும் ஒன்றுபடவேண்டும்” என்றார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like