தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடத்தும் அடிப்படைவாத அமைப்பின் குழுவுக்குள் மஹிந்தவின் உளவாளிகள்?

தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடத்தும் அடிப்படைவாத அமைப்பின் குழுவுக்குள் தமது உளவாளிகளை அனுப்பி தகவல்களை பெற்று அக்காலத்தில் செயற்பாடுகளை ஆரம்பித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழ் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி – தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடத்தும் அடிப்படைவாத அமைப்பு உங்களது ஆட்சிக்காலத்தில் தோன்றியதொன்றா?

பதில் – எமது காலங்களில் அவர்கள் சிறிதளவில் செயற்பாடுகளை ஆரம்பித்தனர். அதன்போதே அவர்கள் தொடர்பில் தேடுவதற்கு ஆரம்பித்தோம். அவர்களின் குழுவுக்குள் எமது உளவாளிகளை அனுப்பி தகவல்களைப் பெற்று அக்காலத்தில் செயற்பாடுகளை ஆரம்பித்தோம்.

கேள்வி – அவர்களுக்கு கொடுப்பனவுகளையும் வழங்கியுள்ளீர்களா?

பதில் – உளவாளிகள் அவர்களது கடமைகளை செய்கின்றனர். அதற்கான கொடுப்பனவை வழங்க வேண்டும். அவ்வாறில்லையெனின், எந்தத் தகவல்களும் கிடைக்காது.

கேள்வி – எனினும், மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம், எதிர்காலத்தில் நன்மை பெறுவதற்காக பல்வேறு குழுக்களை நிர்வகித்து வந்ததாக அரசாங்கத்திலுள்ள சிலர் கூறுகின்றனர். அவ்வாறானதொரு குழுவா இது?

பதில் – அவ்வாறான குழுக்களை நிர்வகிக்கவில்லை என்றால் உளவுத்தகவல்களை எவ்வாறு பெறுவது? உளவுத்தகவல்களை பெறுவதற்கு அந்தக் குழுக்களுக்குள்ளே ஆட்களை அனுப்ப வேண்டும்.

வேறு எப்படி செய்வதென்று எமக்குத் தெரியாது. அவ்வாறு நாம் நியமித்தவர்கள் வழங்கிய தகவலுக்கேற்ப செயற்பாடுகளை முன்னெடுத்தோம்.

இந்தத் தாக்குதல் திட்டம் குறித்து இந்தியா எமது பாதுகாப்புப் பிரிவுக்கு தகவல் வழங்கியிருந்தது. அது தீர்க்கதரிசனத்தால் வழங்கிய தகவலல்ல.

அது அவர்களது உளவாளிகள் வழங்கிய தகவல். எமது உளவாளிகளும் அந்தக் குழுக்களில் தொடர்ந்தும் இருந்திருந்தால் எமது புலனாய்வு பிரிவுக்கும் நேரடியாக தகவல் கிடைத்திருக்கும்.

எமது காலத்தில் அவர்களின் செயற்பாடுகளை அவதானித்து வந்தோம். இந்த அரசாங்கம் உளவுத்துறையை உதாசீனப்படுத்தியது. அதற்காக தற்போது முழு நாடும் நஷ்டப்பட வேண்டியுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like