சஹரானுடன் தொடர்பிலிருந்த முக்கியஸ்தர் தலைமறைவு! அவர் யார் தெரியுமா??

தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரானுடன் தொடர்புடைய, பிரபல தனியார் கல்வி நிறுவனத்தின் தலைவரான முஸ்தபா அப்துல் ரஹ்மானை உடனடியாக கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஒரு சிலரை கைது செய்வதால் இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாது என்றும் இதன் பின்னணியில் பாரிய வலையமைப்பொன்று உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சவுதி அரேபிய புலனாய்வுப் பிரிவினர், இலங்கையில் வகாபிசத்தை (அடிப்படை வாதம்) நிலைநாட்டவும் அதனை கட்டியெழுப்பவும் பல்வேறு செயற்பாடுகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார்கள்.

இவர்கள், உறுப்பினர்களை அல்லாது தலைவர்களையே உருவாக்குகிறார்கள். அதாவது, 50 அமைப்புக்கள் இவ்வாறு காணப்படுகின்றன.

இவைதான் பல்வேறு பெயர்களில் இலங்கையில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. அதன் ஒரு தகவலையே தற்போது வெளியிடவுள்ளேன்.

முஸ்தபா அப்துல் ரஹ்மான், என்பவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாவார். இவர் இலங்கையில் தனியார் கல்வி நிறுவனமொன்றின் உரிமையாளராக இருக்கிறார். இவரை உடனடியாக அரசாங்கம் கைது செய்ய வேண்டும்.

இவர் இலங்கையில் குண்டு வெடிப்புச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சஹரானுடனும் தொடர்பில் இருந்துள்ளார்.

இவரின் பின்புலத்தை பார்த்தால், இவருக்கு கட்டாரில் எத்தனை ஹோட்டல்கள் உள்ளன, கட்டங்கள் எத்தனை உள்ளன, இலங்கையில் எத்தனை கல்வி நிறுவனங்கள் உள்ளன என்பதெல்லாம் தெரியவரும்.

இந்த கல்வி நிறுவனங்கள் நாடளாவிய ரீதியாக பல்வேறு பிரதேசங்களிலும் காணப்படுகின்றன. முஸ்தபா அப்துல் ரஹ்மான் போன்றோர் நல்லாட்சிக்கான முன்னணி என்ற ஒரு அமைப்பையும் ஸ்தாபித்துள்ளார்கள்.

இதனை இலங்கையில் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று நான் தேர்தல்கள் ஆணையாளரிடம் வலியுறுத்துகிறேன்.

2014ஆம் ஆண்டே நான் மொஹமட் சஹரான் தொடர்பில் நாட்டுக்கு தெரியப்படுத்தியிருந்தேன். இவர் நாட்டை விட்டு தப்பித்துள்ளார் என்றும் கூறியிருந்தேன்.

இதற்கு சிப்லி பாரூக் மற்றும் இந்த அப்துல் ரஹ்மான் தான் உதவிகளை செய்துள்ளார்கள். இவர் தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் என்ற தோற்றமே வெளியுலகுக்குத் தெரிகிறது.

ஆனால், இவரை அரசாங்கம் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். நாம் அனைத்து விடயங்களையும் கூறிவிட்டோம்.

தற்போது குருநாகல் வைத்தியர் ஒருவரை கைது செய்துள்ளார்கள். ஆனால், இதன் பின்னணியில் ஒரு வலையமைப்பே இருக்கிறது.

வேரை வெட்டாமல் கையை மட்டும் வெட்டி எந்தப் பயனுமில்லை. இதற்கான பணத்தை வழங்கும் மூலங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

வாகாபிசத்தை விட சலபி வாதம் ஆபத்தானது. அரச நிறுவனங்களிலும் இவர்கள் காணப்படுகிறார்கள்.

இவை அனைத்துக்குமான தகவல்கள் எம்மிடமுள்ளன” என்றும் தெரிவித்துள்ளார்.