மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு முன்பாக குழப்பம்! கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பொலிஸார்

மட்டக்களப்பு – பார் வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு முன்பாக இன்று மாலை ஏற்பட்ட பதற்ற நிலைமையை பொலிஸாரினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பார் வீதியில் உள்ள கிறிஸ்தவ சபையொன்றில் தனது மகளை பார்க்கவிடாமல் ஐந்து வருடமாக உள்ளே வைத்துள்ளதாக கோரி தாயொருவர் தனது மகளை மீட்டுத்தருமாறு கோரி குறித்த சபைக்கு முன்பாக இன்று மாலை போராட்டமொன்றினை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது குறித்த தாயை சபையின் பணியாளர்கள் உள்ளே விட அனுமதிக்காத நிலையில் வெளியில் இருந்து தனது மகளை தன்னுடன் அனுப்பி வைக்குமாறி தாயார் போராட்டம் நடாத்தியுள்ளார்.

தனது மகள் தன்னை ஐந்து வருடமாக பார்க்கவில்லையெனவும், தனது மகள் தொடர்பில் முகநூல்களில் பிழையான விடயங்கள் பரப்பப்பட்டுவருவதாகவும், தனது மகளை மீட்கும் வரையில் செல்லமாட்டேன் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது அப்பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி குறித்த தாய்க்கு ஆதரவாக பேசியதுடன் குறித்த சபைக்குள் சென்று சபை நிர்வாகத்துடன் வாக்குவாதங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் குறித்த பெண்ணை அனுப்பமுடியாது என நிர்வாகம் தெரிவிக்க இளைஞர்கள் சபைக்குள் புகுந்து பெண்ணை மீட்க முனைந்தபோது அங்குவந்த பொலிஸார் இளைஞர்களை வெளியேற்றி நிலைமையினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

இதன்போது குறித்த தாயின் கோரிக்கை தொடர்பிலும், அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பிலும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தாய் மற்றும் மகள் சபையின் போதகர் ஆகியோரை பொலிஸார் விசாரணைகளுக்காக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதேநேரம் குறித்த கிறிஸ்தவ சபை பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த தேவாலயம் தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு கருத்துகளும்,காணொளிகளும் முகநூல் பதிவுகளின் ஊடாக வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like