குருணாகலை வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு எதிராக இன்றைய தினமும் மதியம் 12 மணி வரை 41 பெண்கள் முறைப்பாடுகளை தாக்கல் செய்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது வரையில் குறித்த வைத்தியருக்கு எதிராக கிடைக்கப் பெற்றுள்ள மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 540 ஆக உயர்வடைந்துள்ளது.
குருணாகலை மற்றும் தம்புள்ளை பகுதிகளை சேர்ந்த பெண்களே குருணாகலை வைத்தியசாலையின் நிர்வாக சபையிடம் இவ்வாறு எழுத்து மூலம் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.
மகப்பேற்றின்போது வைத்தியர் மொஹமட் ஷாபி தங்களுக்கு கருத்தடை செய்திருக்கலாம் என்றும், இதன் காரணமாகவே அவரிடம் சிகிச்சை பெற்ற பின்னர் குழந்தைகள் பிறக்கவில்லை என்றும் முறைப்பாடுகளில் பெண்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மகப்பேற்றின் போது சிங்கள, பௌத்த பெண்களை இலக்குவைத்து கருத்தடை சத்திர சிகிச்சை மேற்கொண்டுள்ளார் என கூறப்படும் குறித்த வைத்தியருக்கு எதிராக கடந்த 26ஆம் திகதி முதல் முறைப்பாடுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






