மரண தண்டனையை எனக்குத் தாருங்கள்! நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்த ரிசாட்

என்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதியுச்ச தண்டனையான மரண தண்டனையை எனக்குத் தாருங்கள்.

ஆனால் என்னை வைத்து என் சமூகத்தை பழி வாங்காதீர்கள் என முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

உலக பயங்கரவாதம் இந்த நாட்டிற்குள்ளே புகுந்து இந்த நாட்டில் உள்ள ஒரு சில முஸ்லிம் இளைஞர்களை அதற்குள்ளே சம்பந்தப்படுத்தி கடந்த ஈஸ்டர் தினத்தில் படு பயங்கரவாத தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த நாட்டில் வாழும் 22 இலட்சம் முஸ்லிம் மக்களையும் அந்த தாக்குதலுடன் தொடர்புபடுத்தி அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள் என்று அழகாக சிங்கள மொழியில் பேசுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இங்கு இருக்கின்றார்கள்.

சாய்ந்தமருதிலே பல லட்சம் ரூபா பணத்தோடு நின்று எங்களை காப்பாற்றுங்கள் காட்டிக்கொடுத்து விடாதீர்கள் என உயிர்பிச்சைக் கேட்ட போது அவர்களை காப்பாற்றாமல் பொலிஸாருக்கு தகவலை கொடுத்து ஒட்டு மொத்த ஆதரவையும் சாய்ந்தமருது முஸ்லிம் சமூகம் செய்தது.

எதிர்க்கட்சியில் உள்ள சிலர் ஆட்சிபீடத்தில் வந்து அமர வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக 22 இலட்சம் முஸ்லிம் மக்களின் உள்ளத்தையும் உடைக்கின்றார்கள். எங்களது நெஞ்சை பிளக்கின்றார்கள். எங்களின் சொத்தை அழிக்க வேண்டும் என திடசங்கற்பம் பூண்டு செயற்படுகின்றார்கள்.

நாங்கள் பயங்கரவாதிகள் இல்லை, பயங்கரவாதத்திற்கு உதவி செய்ய மாட்டோம், உதவி செய்யவில்லை, எங்களுக்கே தெரியாமல் உலக பயங்கரவாதம் இங்கு உள்நுழைந்துவிட்டது.

எனவே இதை துடைத்தெறிவோம். நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருகின்றோம், உங்களோடு சேர்ந்து செயற்படுகின்றோம். இங்குள்ள மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்வோம் என்று நாங்கள் ஒட்டுமொத்தமாக அழைக்கின்றபோது ஏன் அப்பாவி முஸ்லிம்கள் மீது இந்த பழியை போடுகின்றீர்கள்.

நாங்கள் இந்த நாட்டிலே சந்தோசமாக வாழ ஆசைப்படுகின்றோம். எமக்குள் பிரிவு வேண்டாம். பிளவு வேண்டாம்.

கப்பல் சக்கரத்தை உடைய ஆடையை அணிந்திருந்ததிற்காக முஸ்லிம் தாயொருவர் 21 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் பல அழிவுகளுக்கு காரணமானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வெட்கப்படுகின்றோம். இவ்வாறான இந்த நிலை மாறவேண்டும் என நாங்கள் வேதனையோடு சொல்லுகின்றோம்.

அது மட்டுமல்ல ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாதத்தைப் போலத்தான் இலங்கையில் இருக்கின்ற இந்த நாட்டினுடைய பக்தர்கள் என்று பேசிக்கொண்டிருக்கக் கூடிய இன்னுமொரு பயங்கரவாத கூட்டம் இருக்கின்றது. அந்த கூட்டம்தான் மினுவாங்கொடை அழிவிற்கு காரணம்.

நேற்றையதினம் நான் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் எங்களது பதவிகளை ராஜினாமா செய்தோம். யாருக்கும் பயந்து நாங்கள் ராஜினாமா செய்யவில்லை. இந்த நாட்டுக்காகவே ராஜினாமா செய்தோம்.

இந்த நாட்டிலே எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு ஒரு பொறுப்பு உண்டு, அவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் ஆகியோரும் ஒன்று சேர்ந்து எவ்வாறு இந்த நாட்டை காப்பாற்றலாம், இந்த பயங்கரவாதத்தை துடைத்தெறியலாம் என்று இந்த மூன்று தலைவர்களும் இருந்து பேச வேண்டும்.

இந்த பயங்கரவாத தாக்குதலுடன் அணு அளவும் தொடர்பில்லாதவன் நான். என்மீது சந்தேகம் இருந்தால் ஊர்வலம் போவதை விடுத்து மீடியாக்களில் பேசுவதை விடுத்து சீ.ஐ.டி.யில் முறைப்பாடு செய்யுங்கள். விசாரணை நடத்துங்கள்.

என்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதியுச்ச தண்டனையான மரண தண்டனையை எனக்குத் தாருங்கள். ஆனால் என்னை வைத்து என் சமூகத்தை பழி வாங்காதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.