களுத்துறையில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹொரணை – மொரகஹஹேன நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வன்முறையாக மாறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை இரண்டு பேர் போத்தல் ஒன்றில் பெற்றோல் வாங்குவதற்காக அங்கு சென்றுள்ளனர். எனினும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் அதனை நிராகரித்தமையினால் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்று மேலும் சிலருடன் வந்து அதன் ஊழியர்களையும் , முகாமையாளரையும் தாக்கியுள்ளனர். இதன்போது , ஊழியர்களும் சந்தேகநபர்களை தாக்கியுள்ளதாக தெரிகிறது.
இந்த தாக்குதலில் காயமடைந்த 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் ஹொரணை ஆதார வைத்தியசாலையில், இரண்டு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் நான்கு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.






