மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் பாரிய குண்டுவெடிப்புச் சத்தத்தால் பதற்றம்! பாடசாலைகளுக்கும் பூட்டு

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரைப் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் குண்டுசெயலிழக்கச் செய்தமையினால், அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

விசேட அதிரடிப்படையினர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரைப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) குண்டுகளை செயலிழக்கச் செய்தனர்.

மக்களுக்கும், பாடசாலைகளுக்கும் எந்தவித முன்னறிவித்தல்களும் வழங்கப்படாத நிலையில் இந்த நடவடிக்கையினை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

இதனால், அங்கு பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்ததையடுத்து, அப்பகுதியிலுள்ள உதயபுரம் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் பெரியகல்லாறு மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் பெற்றோர் குவிந்ததுடன், தமது பிள்ளைகளை பாடசாலையில் இருந்து அழைத்துச் சென்றனர்.

இதன் காரணமாக இரண்டு பாடசாலைகளையும் இடையில் மூடவேண்டிய நிலையேற்பட்டதாக பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்த விசேட அதிரடிப்படையினர் அத்துமீறி மேற்கொண்ட நடவடிக்கையே இந்த நிலைமைக்கு காரணம் என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதன்போது, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் குறித்த குண்டை செயலிழக்கச் செய்யப்போவதாக விசேட அதிரடிப்படையினர் கோரியபோது, பாடசாலை நேரத்தில் செய்யவேண்டாம் என கூறிய நிலையிலும் அதனை மீறி விசேட அதிரடிப்படையினர் இந்த நடவடிக்கையினை மேற்கொண்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாதவண்ணம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.