இலங்கையில் தற்கொலை குண்டுதாக்குதல்! கோவையில் சிக்கினார் முக்கிய சூத்திரதாரி

இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்தார் என்ற குற்றச்சாட்டில் கோவையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதான முகமது அசாருதீன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 21ம் திகதி இலங்கையில் தொடர் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த குண்டு தாக்குதலில் 260க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.

இந்த தாக்குதலையடுத்து, தேசிய தௌஹித் ஜமாத் என்ற அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்டதுடன், அந்த அமைப்புடன் தொடர்பில் இருந்த பலர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இந்த தாக்குதல் குறித்து சர்வதேச நாடுகளும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. குறிப்பாக இந்தியா இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியாவின் என்.ஐ.ஏ. அமைப்பின் அதிகாரிகள் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில், தீவிரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இந்தியர்கள் குறித்தும் அறிந்துகொண்டனர்.

குறிப்பாக கோவையில் சிலருடன் தீவிரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்தது பேஸ்புக் தொடர்புகள் மூலம் அறிந்துகொண்டனர்.

அத்துடன், கோவையில் தீவிரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் நெருக்கமாக இருப்பவர்கள் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் அனுதாபிகளாக இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

ஐ.எஸ். தீவிரவாதத்தின் கொள்கைகளை பரப்பும் வகையில் தீவிரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் சில தடவை கோவை வந்து சென்றிருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையிலேயே, கோவையில் ஏழு இடங்களில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது தீவிரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த முகமது அசாருதீன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்” என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.