தனிமையில் வாழ்ந்த மூதாட்டியை மிரட்டியும் சித்திரவதை செய்தும் கொள்ளை – அரியாலையில் அதிகாலை சம்பவம்

யாழ்ப்பாணம், அரியாலை புங்கன்குளம் பகுதியில் தனிமையில் வசித்த மூதாட்டியின் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையா்கள், அவரை வாள் முனையில் அச்சுறுத்தி நகைகள், பணம் மற்றும் அலைபேசியைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனா்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (15) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றது.

மூதாட்டியின் பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்கின்றனா். ஓய்வு பெற்ற அரச ஊழியரான மூதாட்டி தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
அவரது வீட்டுக்குள் கதவுகளை உடைத்தும், கூரையை பிரித்தும் இரு வழிகளால் கொள்ளையா்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனா்.

கும்பல், கூரிய ஆயுதங்களைக் காட்டி மூதாட்டியை அச்சுறுத்தியுள்ளது. அத்துடன், அவரது வாய்க்குள் துணியை அடைந்து கொடுமைப்படுத்தியுள்ளது.
அவரது வீட்டைச் சல்லடை போட்டுத் தேடியுள்ள கொள்ளைக் கும்பல் பணம், நகை மற்றும் அலைபேசியைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை மூதாட்டியைப் பார்க்கச் சென்ற ஒருவர், அங்கு கொள்ளை நடந்துள்ளதை அறிந்துள்ளார்.

இதனையடுத்து அயலவர்கள் கூடி வாய்க்குள் துணிஅடையப்பட்ட நிலையில் மூச்சுவிட சிரமப்பட்ட மூதாட்டியை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.

சம்பவம் தொடா்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அங்கு வந்த பொலிஸாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்த வீட்டில் இதற்கு முன்னரும் சில தடவைகள் கொள்ளை சம்பவம் இடம்பெற்றதாக அயலவா்கள் கூறுகின்றனா்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like