யாழில் வன்முறை கும்பல்களின் அட்டகாசம்! இதுவரை 11 பேர் கைது – நீதிமன்றத்தின் உத்தரவு

யாழ்ப்பாணத்ததில் கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று இரவு முற்படுத்தப்பட்டனர்.

கொக்குவில், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய மூன்று இடங்களில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைகளையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் 10 பேரையும் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல், அவர்களை அடையாள அணிவகுப்புக்குட்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.

அத்துடன், கொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தனுரொக் என்ற இளைஞர் நேற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவரையும் எதிர்வரும் வரும் ஜூலை முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான், அவர்களை அடையாள அணிவகுப்புக்குட்படுத்துமாறும் அறிவுறுத்தினார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் மஞ்ச வனப்பதியில் நேற்றுமுன்தினம் மாலை வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் வீட்டிலிருந்த பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள் உள்ளிட்ட தளபாடங்களை அடித்து உடைத்து பெற்றோல் ஊற்றிக் கொழுத்தினர்.

3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை நடத்தியது. அவர்கள் வினோதன் (ஆவா) என்பவரின் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அத்துடன், தாக்குதலுக்குள்ளான வீடு தனுரொக் என்றழைக்கப்படுபவரின் உறவினர்கள் வசிக்கும் வீடு என்பதுடன் அங்கு நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இது என்றும் பொலிஸார் கூறியிருந்தனர்.

இந்தத் தாக்குதலை நடத்திய கும்பல், கொக்குவில் சந்திக்கு வந்து சில நிமிடங்கள் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதலையடுத்து மானிப்பாய் சுதுமலைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்கு இருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் வாள்களால் வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றது.

அதனையடுத்து சுன்னாகம் ஐயனார் கோவிலடியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கு இருந்த பெறுமதியான பொருட்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றது. அந்த வீட்டில் வசிக்கும் இளைஞர் ஒருவர், கடந்த பெப்ரவரியில் கொக்குவில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து வேன் உள்ளிட்டவற்றுக்கு தீவைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் வெளி வந்தவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவங்களையடுத்து கொக்குவில் பகுதியில் உள்ள மைதானம் ஒன்றில் விளையாடிவிட்டு பிறந்த நாள் கொண்டாடிய 10 பேரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் ஆவா குழுவில் முன்பு இருந்து அடாவடிகளில் ஈடுபட்டு வந்த அசோக் மோகன் என்பவரும் அடங்குகிறார் என்று பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர். சிலர் மதுபோதையில் இருந்தனர் என்றும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, கொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மானிப்பாயைச் சேர்ந்த தனுரொக் என்ற இளைஞனை பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்கு ஒன்றில் முன்னிலையாகி வீடுதிரும்பிய போது, அவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 11 சந்தேகநபர்களும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று இரவு 8.30 மணியளவில் முற்படுத்தப்பட்டனர். சந்கேதநபர்கள் சார்பில் சட்டத்தரணிகளும் முன்னிலையாகினர்.

இதேவேளை, 11 சந்தேகநபர்கள் தொடர்பிலும் தகுந்த ஆதாரங்கள் இல்லாத நிலையில் கைது செய்துள்ள பொலிஸார், வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் தப்பிக்க வழிவகை செய்கின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பெரும்பலான வன்முறைச் சம்பவம் தொடர்பிலான வழக்குகள் பொலிஸாரின் இந்தச் சோடிப்பு நடவடிக்கைகளால் தோல்வியுற்றன. அதனால் உண்மையான குற்றவாளிகள் தண்டனையிலிருந்து விடுபடும் நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.