வடக்கு மாகாண ஆளுநரின் பகிரங்க அழைப்பிற்கு ஆவா குழு வழங்கியுள்ள பதில்

திறமையற்ற அரச அதிகாரிகளின் செயற்பாடுகள் இலஞ்சம், ஊழல், பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றிற்கு எதிராகக் குரல் கொடுப்போம் என்பதனை தாழ்மையுடன் கூறிக்கொள்கின்றோம் என ஆவா குழு தெரிவித்துள்ளது.

ஆவா குழுவினரை நேரில் சந்தித்தல் என்ற பகிரங்க அறிக்கை வெளியிட்டிருந்தமை தொடர்பாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவினிற்கு பதில் அளிக்கும் வகையில் ஆவா குழுவினர் வெளியிட்டிருந்த கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அக்கடிதத்தில்,

இன்றைய சூழ்நிலை காரணமாக எங்களை உங்கள் மத்தியில் அறிமுகப்படுத்திக் கொள்ள முடியாமைக்கு வருந்துகின்றோம்.

இதற்கான காரணம் எம்மை யார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டால் எமது உரிமைகள் ஒரு கட்டத்தில் மீறப்படுகின்ற சந்தர்ப்பங்கள் கூட பொலிஸார் மற்றும் ஊடகங்களினால் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன.

அந்தவகையில் எமது அமைப்பானது 2012ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது அந்தக் காலப்பகுதியில் வடபகுதியை அச்சத்தில் ஆழ்த்திய விடயமே “கிறீஸ் மனிதன்” என்பதாகும். இது மக்கள் மத்தியில் பாரிய பீதியை ஏற்படுத்தியது.

இதற்காகவே ஒவ்வொரு பிரதேசங்களிலும் பாதுகாப்பை உறுதிசெய்து கொள்ளும் பொருட்டு இளைஞர் அணிகள் உருவாக்கப்பட்டது. இதனால் தோற்றம் பெற்ற எமது அமைப்பானது சமூகத்தைப் பாதுகாத்தல் மற்றும் கலாசாரச் சீரழிவுகளைக் கட்டுப்படுத்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் சிறிய பிரதேசமாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஒட்டுமொத்த யாழ்.மாவட்டம் பூராகவும் எமது அமைப்பிற்கான ஆதரவாளர்கள் சேர்ந்தனர்.

இன்று வடபகுதி முழுவதுமாக எமது அமைப்பு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும் பொலிஸார் மற்றும் ஊடகங்களின் தவறான கருத்துக்கள் சமூகத்தின் மத்தியில் இழுக்கை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக எமது உறுப்பினர்கள் பலர் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. குறிப்பாக எமது அமைப்பின் தலைவரான குமரேசரத்தினம் வினோதன் என்பவர் மீது பல்வேறு வழக்குகள் திணிக்கப்பட்டது.

இருந்தும் அவர் அதிலிருந்து மீண்டு வெளியே வந்தும் அவரது இயல்பு வாழ்க்கையை இன்றும் தொடரமுடியாத ஒரு நிலைமை காணப்படுகின்றது.

இருந்தபோதும் அவர் தனது சிறைவாசத்தின் பின்னர் சமூகப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளினை எமது மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் எமது அமைப்பினால் “ஜனநாயக, சிவில் உரிமைகளுக்கான மார்க்ஸிய இளைஞர் முன்னணி” என்ற பெயரில் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

இது சமூக விரோத செயல்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டது. இருந்தபோதும் எம்மை பழிவாங்கும் நோக்குடன் பல்வேறு செயற்பாடுகள் அன்றுதொட்டு இடம்பெற ஆரம்பித்தன.

அதாவது யாழ்ப்பாணத்தில் பல்வேறு குழுக்கள் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமே.

அவற்றினால் மேற்கொள்ளப்படும் வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் பல்வேறு குற்றச்செயல்கள் என்பவற்றை கண்டுபிடிக்க முடியாத பொலிஸார் வழக்குகளை முடித்துக்கொள்வதற்காக அவற்றினை எமது தலையில் பொறித்துக்கொள்வதோடு அவர்கள் தலைமறைவு என்று வழக்குகளை முடித்துவிடுகின்றனர்.

கடந்த சில தினங்களிற்கு முன்னர் கொக்குவில் புகையிரத நிலைய தலைமை அதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கும் எமது அமைப்பிற்கும் எதுவித தொடர்பும் இல்லை என்பதனை உறுதிப்படுத்துகின்றோம்.

இத்தகைய விடயத்தைப் போலவே பல்வேறு சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டு எமது பெயரை தற்பாதுகாப்புக்காகப் பயன்படுத்தி தப்பித்துக் கொள்வதனால் எமது தலையில் பொறித்துக்கொள்ளப்படுகின்றது.

இதுவே சமூகத்தில் கெட்ட பெயர் ஏற்பட காரணமாகவும் அமைகின்றது. எம்மால் சமூகத்தில் நடக்கும் சில கீழ்த்தரமான செயற்பாடுகளுக்கு எப்போதும் குரல்கொடுப்போம்.

அந்தவகையில் மானிப்பாய் பொலிஸ் அதிகாரி சுதர்சன் என்பவர் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் இலஞ்ச மோசடி தொடர்பாக குரல் கொடுத்தபோது அவரை வெளியே கொண்டுவந்ததுடன் இன்று அதிகாரிகள் அவரை இடமாற்றம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பெண்களுக்கு எதிரான பகிடிவதைக்கு எதிராக குரல் கொடுத்திருந்தோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றும் பல செயற்பாடுகள் குறிப்பாக திறமையற்ற அரச அதிகாரிகளின் செயற்பாடுகள் இலஞ்சம், ஊழல், பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றிற்கு எதிராகக் குரல் கொடுப்போம் என்பதனை தாழ்மையுடன் கூறிக்கொள்கின்றோம்.

ஆகையால் நீங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, நேரில் சந்தித்துப் பேச முடியாத காரணத்தினால் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து, இத்தகைய கடிதம் ஊடாக எமது ஆதங்கங்களை வெளிப்படுத்துகின்றோம்.

ஆகவே எம்மீது சுமத்தப்படும் பழிகளுக்கான காரணத்தை கண்டறிந்து அதற்கான தீர்வினைப் பெற்றுத்தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என ஆவாக் குழுவினால் வெளியிடப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.