யாழில் 5G தொழில்நுட்ப அலைக்கற்றை கோபுரம்; மக்கள் எதிர்ப்பு!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 5G தொழில்நுட்ப அலைக்கற்றை கோபுரமொன்றை அமைக்க வேண்டாம் என தெரிவித்து, பிரதேச மக்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தக் கோபுரத்தின் மூலம் வெளிப்படுத்தப்படும் கதிர்வீச்சினால் கர்ப்பிணிப் பெண்கள் சிறுவர்கள் உட்பட மக்கள் பாதிக்கப்படுவதுடன் புற்றுநோய் உண்டாகும் என அவர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.

யாழ்ப்பாணத்தில் 5G அதிதுரித இணைய சேவைக்கான மின்காந்த அலைக்கற்றை கோபுரங்கள் நிறுவப்படவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த நிலையில் இந்த சேவையால் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படலாம் என்ற அச்சமும் மிகவேகமாக மக்களிடையே பரவியுள்ளது.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் 5G தொழில்நுட்ப அலைக்கற்றை கோபுரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப் பகுதி மக்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த கோபுரத்தை அமைப்பதற்கு, யாழ். மாநகர முதல்வர் இம்மானுவெல் ஆர்னோல்ட் அனுமதி வழங்கியதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தமது பிரதேசத்துக்குள் இவ்வாறு, தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் முன்னெடுக்கும் முயற்சிக்கு தாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சூளுரைத்துள்ளனர்.

எனினும் 5G தொழில்நுட்ப வசதிகளை யாழ்ப்பாணத்திற்குள் அனுமதிக்கும் வகையிலான திறன் கம்பங்களை அமைப்பதாகக் கூறுவது உண்மைக்கு புறம்பான செய்தி என யாழ் மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் கூறியுள்ளார்.

5G தொழில்நுட்ப வசதிகளை அனுமதிக்கும் வகையிலான திறன் கம்பங்களை அமைக்கும் பிரேரணையொன்று யாழ். மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு பதில் அளிக்கும் வகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் அவர் இந்த கருத்தைக் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதி, வலிகாமம் தெற்கு பகுதியில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் ஒன்று உயரம் குறைந்த தொலைபேசி கம்பங்களை நாட்டப்பட்டுவருகின்றது.

5G தொழில்நுட்ப சேவையை ஆரம்பிக்கும் நோக்கிலேயே இந்த கம்பங்கள் நாட்டப்படுகிறது என தகவல் பரவியுள்ள நிலையில், அதனை யாழ் மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் நிராகரித்துள்ளார்.

எதிர்காலத்தில் 5ஜி தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் பொழுது அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து, அது தொடர்பில் பரீசீலனை செய்வோம் எனவும் யாழ். மாநகர முதல்வர் இம்மானுவெல் ஆர்னோல்ட் உறுதியளித்தார்.