முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை!

இலங்கையின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு எதிராக மூன்றுவருட சிறைத்தண்டனையுடன் மூன்று லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரான ஹெக்டர் தர்மசிறி என்பவருக்கு எதிராகவே கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இந்த தீர்ப்புக்கு எதிராக ஹெக்டர் தர்மசிறி செய்த மேன்முறையீட்டையடுத்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

காலி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த இவருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்குத் தொடுத்ததையடுத்து கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய பொலிஸ் மா அதிபராக இருந்த என்.கே.இலங்கக்கோன் என்பவரால் பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்றுவந்த வழக்குகளினடிப்படையிலேயே ஹெக்டருக்கு எதிரான தீர்ப்பு இன்றையதினம் வழங்கப்பட்டது.