ஹிஸ்புல்லாவின் பதவியை பலப்படுத்திய அதிமுக்கிய தமிழன்

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கான காணி கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனின்(பிள்ளையான்) காலத்திலேயே வழங்கப்பட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறீநேசன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ள மட்டக்களப்பு தனியார் பல்லைக்கழகம் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவால் அமைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலின் பின்னர் பல குற்றச்சாட்டுக்கள் ஹிஸ்புல்லா மீது முன்வைக்கப்பட்ட நிலையில் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமை தாங்கிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக குரல் கொடுத்திருந்தனர்.

எனினும் பிள்ளையானின் காலத்திலேயே தற்போது பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகம் அமைப்பதற்கான காணி உள்ளிட்ட பல அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்ச்சியில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த சிறீநேசன்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உண்மையாக இருப்பவர்கள் யாரும் இலஞ்சம் வாங்குவதில்லை. எங்களுக்கு இலஞ்சம் தருவதற்கு பலர் முயற்சிக்கின்றார்கள். ஆனால் கை சுத்தமில்லாதவர்கள் எங்களிடமிருந்து தாவிவிடுகின்றார்கள்.

கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தனின் (பிள்ளையான்) காலத்தில்தான் தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்ற மட்டக்களப்புப் பல்கலைக் கழகத்திற்கு காணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர்களுடைய கட்சிக்காரர்கள் சுத்தக்கார கொத்தமல்லிகள் போன்று கதைக்கின்றார்கள். எம்மைப் பார்த்து யாரும் விரல் நீட்டுவதற்கு லாயக்கு இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, யாரையும் கடத்தவில்லை, காணமலாக்கவில்லை, சிறைப்பிடிக்கவில்லை, சித்திரவதைகள் செய்யவில்லை, பாலியல் துஸ்பிரயோகம் செய்யவில்லை. ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கையோடு பயணிக்கின்றது.

விடுதலைப் புலிகள் போதைவஸ்த்து வியாபாரம் செய்யவில்லை என சரத் பொன்சேகா போன்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜனாதிபதி விடுதலைப் புலிகள் போதைவஸ்த்து வியாபாரம் செய்ததாக தற்போது கொச்சைப்படுத்தும் பேச்சை சொல்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.