புலிகளின் தங்கத்தை தேடிச் சென்றவர்களுக்கு கிடைத்தது என்ன?

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் தங்கத்தை தேடி தனியார் வீடு ஒன்றின் வளவில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அகழ்வு நடவடிக்கை ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

இறுதி போர் நடைபெற்ற காலத்தில் தமிழீழ விடுதலை புலிகளால் அந்த இடத்தில் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடியே இந்த அகழ்வு நடவடிக்கை தனியார் ஒருவரின் காணிக்குள் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் பொலிஸாரின் பாதுகாப்பு போடப்பட்டு வந்த நிலையில் (11) இன்று அகழ்வு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த மாதம் 27ஆம் திகதி அதிகாலை இதே பகுதியில் தங்கத்தை தேடி ஸ்கேனர்களுடன் சென்ற 15 பேர் அடங்கிய குழு ஒன்றினை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை மையமாகவைத்து குறித்த பகுதியில் அகழ்வு செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு உதவிபிரதேச செயலாளர், கிராமசேவையாளர், தொல்பொருள்திணைக்கள உத்தியோகத்தர்கள்,படையினர்,பொலிஸார் ஆகியோர் முன்னிலையில் குறித்த பகுதி தோண்டப்பட்டது.

இறுதிவரை அகழ்வு நடைபெற்ற போதிலும் எந்தவிதமான பொருட்களும் கிடைக்காத நிலையில் அகழ்வு நடவடிக்கை நிறுத்தப்பட்டது.