மேடையில் தனது பெயரை சொல்லவில்லையாம்: ரணிலின் முன் மல்லுக்கட்டிய சரவணபவன்!

சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தார்.

ரணில் உரையாற்றியபோது, இன்னும் 3 வருடத்தில் தமிழர்களின் இனப்பிரச்சனையை தீர்ப்பதாக தெரிவித்திருந்தார். தமது ஆட்சிக்காலத்தில் தமிழர்களின் பிரச்சனையை தீர்ப்பதாக தற்போதைய பதவிக்காலத்தின் ஆரம்பத்திலும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். எனினும், அது நடக்கவில்லை.

இந்தநிலையில் கடந்த வாக்குறுதியை மறந்து, மீண்டும் ரணில் வாக்குறுதி வழங்கியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு தரப்பு இந்த வாக்குறுதி பல்டிகளிற்கு என்ன பதில் சொல்லப் போகிறது என்ற பரவலான எதிர்பார்ப்பு இருக்கலாம். அதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் இந்த விவகாரத்தை, அரசியல் பொறுப்புணர்ச்சியுடன் அணுகுவார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

அதற்கு காரணம்- இதே நிகழ்வில் நடந்த சில சம்பவங்களாகும்.

ஸ்கந்தவரோதயா கல்லூரியின் கலையரங்கம் ஒன்றிற்கு இன்று பிரதமர் ரணில் அடிக்கல் நாட்டியிருந்தார். பாடசாலை சமூகத்தின் கோரிக்கையை ஏற்று, மானிப்பாய் தொகுதி எம்.பி த.சித்தார்த்தனால், பிரதமர் அமைச்சிடம் வழங்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, கலையரங்கிற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், ஈ.சரவணபவன் எம்.பி, தானே அதற்கான கோரிக்கையை வைத்ததாக தெரிவித்து, மல்லுக்கட்டலில் ஈடுபட்டார். இது பிரதமர் தரப்பையும், பாடசாலை சமூகத்தையும் அசௌகரியப்படுத்தியதுடன், முகச்சுழிப்பையும் ஏற்படுத்தியது.

கலையரங்கிற்கான நிதியை பெற்றுத்தந்தவர், ரணிலை நிகழ்விற்கு அழைத்து வந்தவர், அந்த தொகுதி எம்.பி என்ற அடிப்படையில் த.சித்தார்த்தன் எம்.பி நிகழ்வில் முன்னுரிமைப்படுத்தப்பட்டிருந்தார். நிகழ்வு அழைப்பிதழில், த.சித்தார்த்தனின் அழைப்பில் பிரதமர் கலந்து கொள்கிறார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டு, சித்தார்த்தனின் மூலம் கலையரங்க நிதி அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்த சரவணபவன் எம்.பி தரப்பினர், பாடசாலை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, சரவணபவனின் பெயரையும் அழைப்பிதழில் இணைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். எனினும், பாடசாலை நிர்வாகம் அதை மறுத்து விட்டதாக, பாடசாலை சமூகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

இதேவேளை, பாடசாலைக்கு கட்டடம் ஒன்று தேவையென சில காலத்தின் முன்னர் ஈ.சரவணபவனும் கோரிக்கை விடுத்திருக்கிறார். எனினும், அவரது கோரிக்கை கவனிக்கப்படாமல் இருந்துள்ளது. எனினும், தனது கோரிக்கையின் பிரகாரமே கலையரங்க நிதி ஒதுக்கப்பட்டதாக தனது ஆதரவாளர்கள் மூலம் முகப்புத்தக பிரசாரத்தை சரவணபவன் ஆரம்பித்திருந்தார்.

அத்துடன் இன்றைய நிகழ்வின் அழைப்பிதழில் சரவணபவனின் பெயர் குறிப்பிட்டிருக்காத போதும், தானாக சென்று முன்வரிசையில் நின்று கொண்டார். கடந்த தேர்தலில் திண்டாடி வென்ற சரவணபவன், அடுத்த தேர்தல் நிச்சயம் சிக்கலாக இருக்கும் என்பதை உணர்ந்ததால், அனைத்து பகுதிகளிலும் அவசரகதியில் அபிவிருத்தி திட்ட ஆரம்பம் என அடிக்கல் நாட்டி வருகிறார். இப்படி தென்மராட்சியில் வைக்கப்பட்ட அனேக திட்டங்களிற்கு இன்னும் திட்ட ஒப்புதலே பெறப்படவில்லையென தெரிகிறது. இந்த வரிசையிலேயே ஸ்கந்தவரோதயா கலையரங்கையும் உரிமைகோர முயன்றிருக்கிறார்.

எனினும், நிகழ்வு மேடையிலேயே ச.பவன் குழுவின் முகநூல் பிரச்சாரம் போலியானது என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் போட்டுடைத்தார். சித்தார்த்தனின் கோரிக்கையின் பெயரிலேயே, பிரதமர் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதியினால் இந்த நிதி விடுவிக்கப்படுவதாக தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க பழைய வாக்குறுதியை மறந்து, மீண்டும் வாக்குறுதி வழங்கியதையெல்லாம் கேள்விகேட்க தோன்றாத ச.பவன், விஜயகலா உரையாற்றி விட்டு வரும்போது, ரணில் விக்கிரமசிங்கவின் பக்கத்தில் சென்று அவருடன் மல்லுக்கட்டினார். தானும் அதற்கான கோரிக்கை கடிதத்தை வழங்கியதாகவும், தனது பெயரை ஏன் மேடையில் சொல்லவில்லையென மல்லுக்கட்டினார். இந்த மோதலில் காரசாரமான வார்த்தைகள் பாவிக்கப்பட்டதாக தெரிகிறது.

எப்படி நிதி ஒதுக்கப்பட்டது என்பது தெரியாவிட்டால், கொழும்பு அமைச்சில் போய் கேட்டுத் தெரிந்து கொள்ளும்படி விஜயகலா சூடாக பதிலளித்து விட்டு சென்றுள்ளார். அதற்கு முன்பாகவே ரணில் அந்த மோதலில் தலையிடாததை போல பாவனை பண்ணிக் கொண்டு நகர்ந்து விட்டார்.

Source : Pagetamil