இதயத்தை கிழித்த சம்பவத்தில் இதுவும் ஒன்று : இந்திய பாராளுமன்றத்தில் ஈழத்தமிழர்களுக்காக கலங்கி அழுத எம்.பி.!

ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு செலுத்தப்படாத மவுன அஞ்சலி நான் இறந்த பிறகு எனக்கும் செலுத்த வேண்டாம் என மைத்ரேயன் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார்.

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு மைத்ரேயன், லட்சுமணன், ரத்தினவேல், அர்ஜூனன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி ராஜா, திமுக சார்பில் கனிமொழி ஆகியோர் அனுப்பப்பட்டனர். இவர்களது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது.

அப்போது கடைசியாக அவர்கள் 5 பேரும் உரையாற்றினர். இதில் மைத்ரேயன் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அவர் பேசுகையில் என் மீது அளவுக்கடந்த நம்பிக்கை வைத்து 3 முறை இந்த அவைக்கு அனுப்பி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. அவருக்கு நான் எப்போதும் விசுவாசமாக இருப்பேன்.

இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது மாநிலங்களவை கண்டுகொள்ளவும் இல்லை. இரங்கல் தெரிவிக்கவும் இல்லை. என் இதயத்தை கிழித்த சம்பவங்களில் இதுவும் ஒன்று.

அதனால் என்னுடைய இறப்பின் போதும் இந்த அவை எனக்கு இரங்கல் தெரிவிக்க வேண்டாம் என உருக்கமாக பேசினார். பொதுவாக எம்பிக்களோ, முன்னாள் எம்பிக்களோ உயிரிழந்தால் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்படுவது வாடிக்கையான ஒன்று. அதைத்தான் மைத்ரேயன் குறிப்பிட்டுள்ளார்.