யாழை நாசமாக்கும் ஐஸ்கிறீம் கடையின் முறைகேடு! பின்புலத்தில் விளையாடியது அரசியல் செல்வாக்கா! பணமா?

அண்மையில் யாழ் பண்ணை கடற்கரையில் ஒரு ஐஸ்கிறீம் கடை திறக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஐஸ்கிறீம் கடையானது , யாழ் மாநகரசபைக்கு சொந்தமான கட்டடத்தை தனியார் வர்த்தகர் ஒருவர், கேள்வி கோரல் மூலம் பெற்று வர்த்தக நிலையத்தை நடத்துவதாக சொல்லப்பட்டது.

ஆனால் ஐஸ்கிறீம் கடை திறப்பு விழாவில் தலைமைதாங்கியவர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில், இந்த ஐஸ்கிறீம் கடையை திறப்பதில் எமது முதல்வர் எவ்வளவு சிரமப்பட்டார் தெரியுமா?, பல்வேறு சிரமங்களை பட்டு எமக்காக கடையை திறந்திருக்கிறார் என பேசிய நிலையில், அதன் பின்னர் உரையாற்றிய ஆர்னோல்ட், அப்படியெல்லாம் கிடையாது, எல்லாம் சட்டப்படிதான் நடந்தது என கூறியுள்ளார்.

இவ்வாறான பின்னனியில் உண்மையில் இந்த வர்த்தக நிலையம் சட்டப்படி கையளிக்கப்பட்டதா என்பது பலருக்கும் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதன் பின்னனியில், குறித்த வர்த்தக நிலைய கையளிப்பில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது தமிழ் அரசு கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையை வெளியிடுபவரே இந்த வர்த்தக நிலையத்தை பெற்றுள்ளதாகவும்,கட்சிக்கும் அவருக்கும் நல்ல நெருக்கம் இருக்கின்றதன் அடிபடையில் குறித்த கட்டடம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

இதேவேளை சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட விளம்பர பலகையொன்றில் இவரது வர்த்தக நிலைய விளம்பரம் இலவசமாக பிரசுரிக்க அனுமதிக்கப்பட்டிருந்ததோடு, கட்சிக்காக பத்திரிகை வெளியிடுபவர் என்பதற்காக முறையற்ற விதத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் , சாவகச்சேரி நகரசபைக்கு விளம்பர வருவாய் இழக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அதே வர்த்தகரிற்கு பண்ணை கடற்கரையில் தமிழ் அரசு கட்சியின் முதல்வர் உள்ள நகரசபை வர்த்தக நிலையம் வழங்கியிருக்கிறது என்றால், அதில் ஏதும் தில்லுமுல்லு நடந்திருக்க வாய்ப்புகள் உள்ளது.

யாழ் மாநரசபையின் பராமரிப்பில் உள்ள பண்ணை கடற்கரையில், மாகாணசபையின் நிதியுதவியுடன் வர்த்தக நோக்கத்துடன் கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்ட நிலையில், அதை சிற்றுண்டிச்சாலையாக நடத்த கடந்த மார்ச் 5ம் திகதி யாழ் மாநகரசபை கேள்வி கோரியிருந்தது.

குறித்த சிற்றுண்டிச்சாலை நடத்த 13 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இதில் அதிகபட்சமாக இருவர் சம அளவிலான தொகையில் கேள்வி கோரியிருந்தனர். இருவரும் தலா 3 இலட்சம் ரூபா கேள்வித் தொகை குறிப்பிட்டிருந்தனர்.

அந்தவகையில் சுஜி ஹோல்டிங் பிரைவேற் லிமிட்டட், மற்றும் மு.அகிலகுமாரன் ஆகியோரே இவ்வாறு சம அளவில் கேள்வி கோரியிருந்தனர்.

இதேவேளை இந்த கேள்வி அறிவித்தலில், எந்தவிதமான புறநிபந்தனைகளும் விபதிக்கப்பட்டிருக்கவில்லை. போரால் பாதிக்கப்பட்ட பகுதியில் மக்களின் வாழ்வாதார உதவி தொடர்பான நிபந்தனைகளை, கேள்வி கோரலிலேயே குறிப்பிடுவது வழக்கம். எனினும், இதில் அப்படியெதும் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவிக்கபடுகின்றது.

மாநகரசபையின் இந்த கேள்விச்சபையில் மக்கள் பிரதிநிதியான முதல்வரும், மாநகரசபை அரச உத்தியோகத்தர்களான ஆணையாளர் மற்றும் இருவர் உள்ளடங்கினர்.

சட்ட ஏற்பாடுகள் எதுவும் கிடையாதென்றபோதும், ஊழல் மோசடியை தவிர்க்கும் நோக்கத்துடன் கேள்விச்சபையில் மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கும் மரபு வழக்கமாக எல்லா சபைகளிலும் பின்பற்றப்படுகின்ற வழக்கம் உள்ளது.

எனினும், கேள்விச்சபையில் இந்த நடைமுறையை ஆர்னோல்ட் பின்பற்றவில்லை எனவும், முழுவதும் அரச உத்தியோகத்தர்கள் இருப்பின், மாநகரசபை மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்பின்மையை ஏற்றுக் கொள்ளலாம். எனினும், ஏனைய உறுப்பினர்களை நிராகரித்தது, ஆர்னோல்ட் கேள்விச்சபையில் இருந்தமை பல்வேறு சந்தேகங்களை ஆரம்பத்திலேயே உறுப்பினர்களிடம் ஏற்படுத்தியிருந்தது.

தவிர, நிதிக்குழுவே கேள்விச்சபையாகவும் இயங்குவது வழக்கம் என்பதோடு, கேள்விச்சபை விவகாரம் முழுமையாக, நிதிக்குழு அறிந்திருக்கும். இந்நிலையில் யாழ் மாநகரசபையில் அப்படி நடப்பதில்லை என சுட்டிக்காடப்பட்டுள்ளது.

நிதிக்குழுவிலுள்ள 6 மக்கள் பிரதிநிதிகளில், 4 பேர் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள். கேள்விச்சபை விவகாரங்கள், நிதிக்குழுவுக்கு தகவலாக மட்டும் தரப்படுவதாகவும், தமது கருத்து ஏற்கப்படுவதில்லையென்றும், இதனால், கேள்விச்சபை விடயங்களை வெறும் தகவலாக மட்டும் எமக்கு தர வேண்டாமென கூறிவிட்டதாக நிதிக்குழு எதிரணி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், சம அளவிலான கேள்வித்தொகை இருவரால் கோரப்பட்டிருந்தால், இருவரையும் தொழில்நுட்பக்குழு நேர்காணல் செய்திருக்க வேண்டும். அந்த நேர்காணலின் அடிப்படையிலேயே, யாருக்கு ஒப்பந்தத்தை வழங்கலாமென்ற முடிவெடுக்கப்பட வேண்டும். ஆனால், இந்த ஒப்பந்தத்தில் அந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை என்றும், மு.அகிலேந்திரன் என்ற தமிழ் அரசு கட்சியினருக்கு நெருக்கமானவர் மட்டுமே நேர்காணல் செய்யப்பட்ட விபரம் தொழில்நுட்பக்குழுவால் அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது.

போரால் பாதிக்கப்பட்டவர்களிற்கு உதவிகள் செய்வது உள்ளிட்ட சில தகவல்களை உள்ளடக்கியதாக மு.அகிலேந்திரனின் கடிதம் ஒன்றும் ஆவணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளமையானது விவகாரத்தை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

கேள்வி கோரலில் ஒப்பந்தக்காரர்களின் மனதாபிமான பணி குறித்த எந்த தகவலும் கோரப்படவில்லை. இந்த நிலையில், சம அளவிலான கேள்வித்தொகை குறிப்பிடமிடத்து, அடுத்த கட்டமாக தொழில்நுட்பக்குழுவின் அறிக்கை ஒப்பந்தக்காரர் யார் என்பதை தீர்மானிக்கும்.

கேள்வி கோரலில், மனிதாபிமானப்பணிகள் குறித்த எந்த தகவலும் கோரப்படாதபடியால், இரண்டு தரப்பிடமும் அந்த விவகாரத்தை நிதிக்குழு கோரிப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் நிதிக்குழு அதை செய்யவில்லையென்றே இதுதொடர்பான ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. அதோடு நிராகரிக்கப்பட்ட தரப்புடன் நிதிக்குழு பேசியதற்கான எந்த பதிவுகளும் கிடையாது எனவும் கூறப்பட்டுள்ளது.

அப்படியெனில், முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட தரப்பிற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டு, அதற்காக மனிதாபிமான பணி குறித்த தகவல் இணைக்கப்பட்டதா என்ற சந்தேகம் இயல்பாக எழ வாய்ப்புள்ளது.

முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட தரப்பு எனில், என்ன காரணத்தினால் அந்த தரப்பு தீர்மானிக்கப்பட்டது? இதனால் அனுகூலமடைவது யார்? ஒப்பந்தத்தை பெற்ற வர்த்தகர், கட்சியுடன் நெருக்கமானவர் என்பதால் கட்சி சார்ந்த அனுகூலமா? அல்லது, வேறு ஏதேனுமா?

மனிதாபிமான பணி குறித்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து, இரண்டு தரப்பிடமும் அதற்கான விபரம் கோரப்பட்டிருந்தால், போரால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு இன்னும் அதிக உதவி கிடைத்திருக்கும். எனினும், அரசியல் செல்வாக்கு காரணமாக, மக்களிற்கு கிடைக்க வேண்டிய உதவி தடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வேண்டப்பட்டவர் ஒருவரிற்காக கேள்வி கோரல் நடைமுறையை வளைத்துக் கொண்டு செல்வது, அதிகார துஷ்பிரயோகமாக அமையாதா என பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் பண்ணை ஐஸ்கிறீம் கடை திறப்பு விழாவில் சில மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. எனினும் மனிதாபிமான பணிகளில் ஈடுபடுபவர்கள் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்களே. ஆனால், முறையற்ற விதத்தில் இன்னொரு ஒப்பந்தக்காரர் தவிர்க்கப்பட்டு, அதனாலேயே மனிதாபிமான பணிகள் குறைவான அளவில் வழங்கப்படுவது எந்த வகைக்குள் அடங்கும் எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதற்காக பதில் சம்பந்தப்பட்டோரிடம் மட்டுமே கிடைக்கும்!