நளினி மகளுக்கு யாழ்ப்பாண மாப்பிள்ளை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி இன்று காலை வேலூர் பெண்கள் சிறையிலிருந்து ஒரேஞ்ச் நிற பட்டுப்புடவை அணிந்து தலையில் மல்லிகைப் பூ வைத்துக்கொண்டு புன்னகைத்தபடி வெளியே வந்தார்.

லண்டனில் தங்கியிருக்கும் ஹரித்ராவுக்கு திருமணம் செய்துவைக்க 6 மாதம் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்குத் தொடர்ந்தார்.

சமீபத்தில் நடைபெற்ற அந்த மனு மீதான விசாரணையில் உயர் நீதிமன்றம் ஒரு மாதம் மட்டும் பரோல் வழங்கியது.

துப்பாக்கி ஏந்திய பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் சத்துவாச்சாரியை அடுத்த ரங்காபுரத்தில் உள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணை பொதுச்செயலாளர் சிங்கராயர் வீட்டுக்கு அழைத்துவரப்பட்டார்.

வீட்டுக்குள் நுழைந்த நளினிக்கு அவரின் தாயார் பத்மாவதி ஆரத்தி எடுத்து, உள்ளே அழைத்துச்சென்றார்.

இங்கேயே தங்கியிருந்து மகளின் திருமண ஏற்பாடுகளை அவர் செய்ய உள்ளார். நளினியுடன் தாய் பத்மாவதி, சகோதரி கல்யாணி, சகோதரன் பாக்கியநாதன் ஆகியோர் தங்கியிருக்கிறார்கள். லண்டனில் உள்ள மகள் ஹரித்ராவும் வேலூர் வந்தடைந்தார்.

‘‘நல்ல நடத்தையுடன் நடந்துகொள்ள வேண்டும். சத்துவாச்சாரி காவல்நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.

ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது. அரசியல் கட்சித் தலைவர்கள், எந்தவொரு அமைப்பையும் சந்திக்கக்கூடாது.

ஓகஸ்ட் 25ம் திகதி மாலை 5 மணிக்கு வேலூர் சிறைக்கு திரும்பிவிட வேண்டும்’’ என்பன உட்பட, 12 நிபந்தனைகளைக் கடைப்பிடிக்குமாறு நளினிக்கு சிறை நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கிறது.

நளினி-முருகன் தம்பதியரின் மகள் ஹரித்ரா, சிறையில் பிறந்தவர் ஹரித்ரா

இது சம்பந்தமாக நளினியின் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசினோம். ‘ஹரித்ராவுக்கு நல்ல வரனை நாலைந்து மாப்பிள்ளைகளின் பொருத்தம் நன்றாக இருக்கிறது.

குறிப்பாக, ஈழத்தமிழர் ஒருவரைத்தான் மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுக்க நளினி விரும்புகிறார்.

மாப்பிள்ளை இலங்கையில் இல்லையென்றாலும் வெளிநாடுகளில் வசிப்பவராகக்கூட இருக்கலாம். நளினிதான் மகளுக்கான மாப்பிள்ளையைத் தேர்வு செய்வார்.

மகள் திருமண ஏற்பாடுகளைச் செய்து முடித்த பிறகு, முருகனுக்கு பரோல் கேட்க உள்ளோம்’’ என்றார்.

மாப்பிள்ளை இலங்கையில் இருக்கிறாரா என்ற கேள்விக்கு, அவர் இலங்கையிலும் இருக்கலாம் வெளிநாட்டிலும் இருக்கலாம் என்று பதில் அளித்தார். இதனிடையே, மாப்பிள்ளையாக வர உள்ளவர், யாழ்ப்பாணத்தில் பிறந்து லண்டனில் வசிக்கும் ஈழத்தமிழர் என்று கூறப்படுகிறது.

லண்டனில் இருந்து திருமணத்துக்காக இந்தியா வந்துள்ள நளினியின் மகள் ஹரித்ரா சிறையில் பிறந்தவர்.

நளினி அடைக்கப்பட்டிருந்த 10 x 12 அளவுள்ள அறைதான், ஹரித்ராவுக்கு உலகமாக இருந்தது என்று 2017ம் ஆண்டு பேட்டியொன்றில் கூறியிருந்தார்.

சில நேரங்களில் லாக்கப் கம்பிகளுக்குள் புகுந்து வெளியேறிவிடும் ஹரித்ராவை மீண்டும் கம்பி வழியாக அறைக்குள் கொண்டுவர படாதபாடு படுவார்களாம்…