அலகரை முருகன் ஆலயத்துக்குள் புகுந்து வன்முறைக் கும்பல் அட்டூழியம் – பொலிஸார் அசமந்தம்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் அலகரை முருகன் ஆலயத்துக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று திருவிழாவைக் குழப்பி, ஆலய ஒலிபெருக்கிகளை அடித்துச் சேதப்படுத்தி அங்கு நின்றவர்களையும் தாக்கியுள்ளது.

வன்முறைக் கும்பலின் அட்டூழியம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் அவர்கள் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஆலயத்தைச் சேர்ந்தோர் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது.

திருவிழாவின் போது காவடி ஆட்டம் மற்றும் இரவு நிகழ்வாக “மாலைக்கு வாதாடிய மைந்தன்” காத்தவராயன் சிந்துநடைக்கூத்து என்பன நடைபெறவிருந்தன.

இந்த நிலையில் ஆலயத்துக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அட்டூழித்தில் ஈடுட்டுவிட்டுத் தப்பித்தது.

பறை அடித்தவர்கள் மீதும் ஆலய வளாகத்தில் இருந்த கடைக்காரர்கள் மீதும் கும்பல் தாக்குதல் நடத்தியது.

“சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸாருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது. எனினும் அவர்கள் வரவேயில்லை. அந்தக் கும்பலுக்கும் பொலிஸாருக்கும் தொடர்புள்ளதா என்று சந்தேகம் எழுகின்றது.

பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் திருவிழாவுக்கு வந்த நிலையில் வன்முறைக் கும்பலின் அட்டூழியத்தால் அவர்கள் ஆலயத்திலிருந்து சென்றுவிட்டனர்” என்று ஆலயத்தைச் சேர்ந்தோர் தெரிவித்தனர்.