புலம்பெயர்தேசத்தில் தொடரும் சோகம் – சுவிட்சர்லாந்தில் ஆற்றில் மூழ்கி ஈழத்தமிழ் சிறுமி உயிரிழப்பு!

சுவிற்சர்லாந்தின் நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஈழத்தமிழ் சிறுமி விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

குறித்த ஏரியில் உள்ள அவாசர் ஆற்றின் கரையோரம் தனது உறவினருடன் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் எவரும் எதிர்பாராத நேரத்தில் சிறுமி தண்ணீரில் வீழ்ந்து மூழ்கியுள்ளார்.சிறுமியுடன் மற்றுமொருவரும் நீரில் மூழ்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர் தம்முடன் சிறுமி இல்லாததை அவதானித்த உறவினர்கள் தேடிப்பார்த்த நிலையில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் தேடுதலை மேற்கொண்ட போதும் அவர்களின் முயற்சி பலனளிக்காத நிலையில் விசேட பயிற்சிபெற்ற அந்நாட்டின் சுழியோடிகள் ஹெலிகொப்டர் மூலம் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் ஆற்றில் ஒன்பது மீற்றர் ஆழத்திலிருந்து சிறுமியும் மேலும் ஒரு நபரும் மீட்கப்பட்டனர்.உடனடியாகவே முதலுதவிகள் வழங்கப்பட்டபோதும் சிறுமி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த ஏரியில் இதுவரை எவருமே உயிரிழக்கவில்லை எனவும் இதுவே முதல் தடவை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக புலம்பெயர் தேசத்தில் ஈழத்தமிழர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.