நல்லூர் கந்தன் ஆலயத்தில் அசத்தும் 10 வயது சிறுவன் !!

இலங்கையின் வரலாற்றின் சிறப்புகளில் இந்துக்களால் அதிகம் போற்றப் படுகின்ற நல்லூர்க் கந்தசுவாமி கோயில் திருவிழா கடந்த 6ம் திகதி லட்சக்கணக்கான மக்கள் புடை சூழ கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. யாழ் கந்தனின் வருடாந்த திருவிழா என்பது இலங்கை மட்டும் இன்றி உலகமெங்கிலும் வாழும் தமிழர்களின் மிகப் பெரிய கொண்டாட்டமாக கருதப் படுகின்றது.

உலகம் முழுவதிலும் இருந்து இந்துக்களால் யாழ்ப்பாணத்தை நோக்கி இனி வரும் சில நாட்களுக்கு படையெடுப்பார்கள், இதற்கு முக்கிய காரணம் கந்தனின் அருளை பெறுவதோடு அங்கு நடைபெறும் ஆன்மீக நிகழ்வுகளையும் கண்டு களிப்பதற்கு தான். நல்லூர் கந்தசுவாமி கோயில் பெருந்திருவிழா ஆரம்பித்ததும் ஆன்மீக இசை நிகழ்ச்சிகளும் ஆரம்பமாகிவிடும்.

இம்முறையும் இவை அனைத்துமே மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்க பலரது கவனமும் சிறுவன் ஒருவனின் பக்கம் திரும்பியது. மங்கள இசையை மக்கள் ரசித்துக் கொண்டிருக்க பிரபல நாதஸ்வர கலைஞரின் மகனான பாலமுருகனின் மகன் B. சங்கரன், கானமூர்த்தி கிருஷ்ணா ஆயியோர் நாதஸ்வரம் வாசித்துக் கொண்டிருக்க வெறும் 10 வயதே ஆன நாச்சிமார் கோயிலடியை சேர்ந்த சிறுவன் பிரபாகரன் வேந்துசன் தவில் வாசித்துக் கொண்டிருந்தார்.

10 வயதில் இத்தனை திறமையா யார் இவர் என தேடினோம். தன்னை பற்றி வேந்துசனே கூறினார். நான் கொக்குவில் இந்துக் கல்லூரியில் படிக்கிறேன். எனக்கு தவிலின் மீது ஆசை ஏற்பட என் அப்பாவே காரணமானார். அவர் ஒரு தவில் கலைஞர் அவரை போல் நானும் தவில் இசைக்க ஆசைப்பட்டேன்.என் தந்தையிடம் என் ஆசையை கூறியதும் அப்பாவும் சம்மதித்தார்.

என்கிறார் சிரித்த முகத்துடன். இது தொடர்பாக வேந்துசனின் தந்தை கருத்து தெரிவிக்கையில் நான் இசைமீது ஆர்வம் கொண்டவன் அதனால் தவில் வாசிக்க ஆரம்பித்தேன் என்னை பார்த்து வேந்துசனும் கிடைப்பதில் எல்லாம் தட்ட ஆரம்பித்தான். சிறு வயதிலேயே இந்த ஆர்வம் ஏற்பட்டதால் பிரபல தவில் கலைஞரான பாலமுருகனின் சகோதரரிடம் கலைந்துரையாடினேன்.

அவர் வேந்துசனை தனது மாணவராக ஏற்றுக் கொண்டார். தற்போது முறைப்படி தவில் பயின்று வருகிறான். மிகச் சிறந்த கலைஞர்களுடன் அமர்ந்து அவர்களுக்கு இணையாக தவில் வாசிக்கிறான். மகிழ்ச்சியாக இருக்கிறது. சிவராத்திரி உட்பட பல ஆன்மீக இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறான். பலரும் பாராட்டும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறியுள்ளார்.