தெஹிவளை தற்கொலை குண்டுதாரி தொடர்பில் வெளியாகிய முக்கிய தகவல்

தெஹிவளை – கரம்கம்பிட்டிய நியூடொபிகல் விடுதியில் குண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்த சஹ்ரானின் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பை சேர்ந்த ஜமால்தீன் என்பவர், அரச புலனாய்வு சேவையில், முஸ்லிம் அடிப்படைவாதிகளை கண்டுபிடிக்கும் கியூ பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருடன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அரபு மொழி படித்த வகுப்பு சகா என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உப பொலிஸ் பரிசோதகர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் குருணாகல் கடுபொத்தவில் அமைந்துள்ள சஹ்ரானின் மனைவியின் வீட்டுக்குச் சென்றிருந்தார் என கூறப்படுகிறது.

ஏப்ரல் 26ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் நடந்த தற்கொலை தாக்குதலில் இறந்த, இரண்டு பெண்கள் அப்போது அந்த வீட்டில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சஹ்ரானின் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பு அடிப்படைவாத செயல்களில் ஈடுபடுவதாக அரச புலனாய்வு சேவையின் கியூ பிரிவினர் கண்டறிந்திருந்தனர் என்பதுடன் ஜமால்தீனும் அவர்களுடன் இணைந்து செயற்படுவதும் கண்டறிப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில், அவருடன் படித்த புலனாய்வுப் பிரிவின் அதிகாரி பற்றி அறியாமல் இருந்தது சிக்கலுக்குரிய விடயம் என ஏனைய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.