கோட்டா அரியணை ஏறினால்! தமிழர்களிற்கு இவையெல்லாம் இலவசம்!

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றால் , அப்போதுதான் கூட்டமைப்பு ஏற்படுத்திய ஆட்சி மாற்றத்தின் பெறுமதியை மறதி மிக்க தமிழ் மக்கள் உணர்வார்கள் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒருவேளை கோத்தபாய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தால் .. நாட்டில் இராணுவ ஆட்சிதான் நடக்கும் என்பதில் யாரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.

அத்துடன் இப்போது கட்டப்பட்டுள்ள இராணுவத்தின் கரங்கள் அவிழ்த்துவிடப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. அதோடு எந்நேரத்திலும் எவரையும் சுட்டுக்கொல்லலாம், பெண்களையும் கற்பழிக்கலாம், எவரையும் எக்கேள்வியும் இன்றி கைது செய்யலாம். யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.

இன்றைய ஆட்சியில் அது குறை இது குறை என விமர்சிப்போர், கோத்தாவின் ஆட்சியில் வாய்மூடி மெளனிகளாய் இருப்பர்.

உறவுகளை காணவில்லையென்று போராட்டம் நடத்துவோர் தங்கள் போராட்டத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுவிடுவார்கள். ஆஓஓஊ யாழ் ஊடக மையத்தின் மைக்கு முன்னால் இருந்து தமிழ் தேசியம் வாசிக்கும் பலர் வெளிநாட்டிற்கு சென்று குடியுரிமை பெற்றிருப்பார்கள்.

கல்முனை வேண்டும், கன்னியா வேண்டும், நீராவியடி பிள்ளையார் கோவில் வேண்டுமென்று எவரும் கொடிபிடித்து போராட மாட்டார்கள். புத்தரை தங்கள் நடுவீட்டில் கொண்டுவந்து அமர்தினாலும் பதில் சொல்லாது குடிபெயர்ந்து போகத்தான் நினைப்பார்களேயொழியே எதிர்த்துக்கேள்விகேட்க மாட்டார்கள்.

கருப்புச்சட்டை போராட்டக்குழுக்கள் வெள்ளைச்சட்டைக்கு மாறிவிடுவார்கள். முள்ளிவாய்க்காலிலும் மாவீரர் துயிலும் இல்லங்களிலும் மறுபடியும் புல்லு முளைக்கும் பழையபடி மெளனமாக அழ பழகிக்கொள்வார்கள் எமது தாய்மார்கள்.

ஓமந்தையிலும் முகமாலையிலும் உங்கள் வீட்டின் முட்டுச்சந்திலும் இராணுவத்தின் முகாம் உருவாகி பழையபடி அனைவரும் அடையாள அட்டைக்கு மேலதிகமாய் ஆர்மி பாஸ் எடுக்கவேண்டிவரும்.

முகநூலில் பிரபாகரன் படம் இருந்தால் நாலாம் மாடியில் நீங்கள் ஆறுக்கு நாலு ரூமில் அடைபட்டுக்கிடக்கவேண்டிவரும். புரட்சிக்கவிதைகளும் புத்தகவெளியீடுகளும் ஒத்திவைக்கப்படும்.

நாங்கள்தான் போராளிகள் மற்றவர்களெல்லாம் துரோகிகள் என இன்று கிளர்ந்தெழுந்திருக்கும் பலர் சரளமாக சிங்களம் பேசியபடி தெருவெல்லாம் திரிவார்கள் தப்பிப்பதற்காக.

எது எப்படியோ வெளிய போன பிள்ளை வீட்டுக்கு வந்து சேரும் வரை அடிவயிற்றில் நெருப்பெரிய காத்திருக்கும் பெற்றாரின் துயர் மட்டும் என்றும் நிலைத்தே இருக்கும், இன்னும் இன்னும் காணாமல் ஆக்கப்படுவாரகள் நம் உறவுகள். அவர்களின் எண்ணிக்கை கூடுமே தவிர ஒருபோதும் குறையாது.

அதற்காய் நன்றாய் வெடிகொளுத்தி வரவேற்போம் கோத்தபாயவெனும் மகாவம்ச மகாவீரனை அல்ல அரக்கனை.