குஜராத்தில் மார்பளவு வெள்ள நீரில், இரண்டு குழந்தைகளை தோளில் சுமந்தபடி பத்திரமாக தூக்கிச் செல்லும் பொலிஸ் கான்ஸ்டபிளின் சேவை தொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
குஜராத் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழைக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாக மீட்புப் நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.
இதுவரை சுமார் 6,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மார்பளவு வெள்ள நீரில், இரண்டு குழந்தைகளை தோளில் சுமந்தபடி பத்திரமாக பொலிஸார் ஒருவர் தூக்கிச் செல்கிறார். பொலிஸ் கான்ஸ்டபிளான பிருத்விராஜ் சிங் ஜடேஜா, கிட்டத்தட்ட 1.5 கிலோ தூரம் வெள்ள நீரில் இரண்டு குழந்தைகளையும் தூக்கிச் செல்கிறார்.
இதுதொடர்பான காணொலிக் காட்சிகளும் வெளியாகி உள்ளன. இந்த காணொலிகளைப் பார்த்த பலரும் அந்தப் பொலிஸ் உத்தியோகத்தரின் அர்ப்பணிப்பு உணர்வையும், துணிச்சலையும் பாராட்டி வருகின்றனர்.
இந்த வீடியோவை கண்ட குஜராத் முதலமைச்சரான விஜய் ரூபானி, பிருத்விராஜ் சிங் ஜடேஜாவின் தைரியத்தை வெகுவாக ட்விட்டரில் பாராட்டியுள்ளார். அதில், “இக்கட்டான சூழ்நிலையிலும் உங்கள் பணியின் அர்ப்பணிப்பை பாராட்டுகிறேன். கடின உழைப்பு, தீர்க்கம், அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு ஜடேஜா முன் உதாரணமாக இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.