2015 பணத்துக்காக நடந்த ஆட்சிமாற்றம்; இம்முறையாவது தமிழர்கள் சிந்திக்க வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்!

2015 ஆட்சி மாற்றம் பணத்திற்காக நடந்த ஆட்சி மாற்றம். எந்த வித நிபந்தனைகளும் இல்லாமல் பணத்திற்காக நடைபெற்ற ஆட்சிமாற்றமாக நடந்தது. அது ஒரு சில கட்சிகளையும், ஒரு சில நபர்களையும், ஒரு சிலரின் நலனையும் கருத்தில் கொண்டு பணத்திற்காக ஆட்சி மாற்றம் நடைபெற்றது என தெரிவித்துள்ளார் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என எல்லோரும் சேர்ந்து கடந்த 60, 70 வருடமாக இந்த நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் தமிழ் மக்களுக்கு செய்த அநீதிகள், அட்டூழியங்களில் இருந்து மீண்டெழ வேண்டுமாக இருந்தால் காத்திரமான முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரவித்தார்.

வவுனியா கற்பகபுரம் நியூ வன் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று (11) இடம்பெற்ற இளைஞர்கள் எழுச்சிக் கிண்ண மென்பந்து சுற்றுப் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

வடக்கு- கிழக்கு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு வேலையில்லாப் பிரச்சனை என்பது பாரிய பிரச்சனை. ஆனால் எங்களுக்கு கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பங்களை நாம் எவ்வளவு தூரம் பயன்படுத்தியுள்ளோம் என்பது விமர்சனத்துக்குரியது.

கடந்த 10 வருட கலமும் எங்களது இளைஞர் யுவதிகளின் வாழ்விற்காக, போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, இளைஞர் யுவதிகளின் வேலை வாய்ப்புக்காக, எமது மக்களின் உரிமைக்காக இந்த தமிழ் தலைமைகள் எவ்வளவு தூரம் இராஜதந்திர ரீதியாக நடந்திருக்கின்றார்கள் என்பது பல்வேறுபட்ட விமர்சனத்திற்குரிய ஒரு பிரச்சனையாக இருக்கிறது.

மீண்டும் எங்களது கையிலே எங்களது உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் வந்துள்ளது. இன்னும் நான்கு மாத காலத்திற்குள் ஒரு ஜனாதிபதித் தேர்தல் வரவிருக்கிறது. இந்த நாட்டினுடைய அடுத்த ஜனாதிபதி யார் என்பது தமிழர்களுடைய கையில் தான் தங்கியுள்ளது. நாங்கள் அளிக்கப் போகும் வாக்கு தான் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கப் போகிறது. ஆகவே அந்த சந்தர்ப்பத்தை நாங்கள் எப்படி பயன்படுத்தப் போகின்றோம்.

இன்றைக்கு பல்வேறுபட்ட கூறுகளாக இருக்கும் நாங்கள் குறைத்த பட்சம் இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என எல்லோரும் சேர்ந்து கடந்த 60, 70 வருடமாக இந்த நாட்டை ஆட்சி செய்த தலைவர்கள் தமிழ் மக்களுக்கு செய்த அநீதிகள், அட்டூழியங்களில் இருந்து மீண்டெழ வேண்டுமாக இருந்தால் காத்திரமான முடிவெடுக்க வேண்டும்.

ஆனால் இன்று 2015ஆம் ஆண்டு எங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பம் எந்த வித நிபந்தனைகளும் இல்லாமல் பணத்திற்காக நடைபெற்ற ஆட்சிமாற்றமாக நடந்தது. அது ஒரு சில கட்சிகளையும், ஒரு சில நபர்களையும், ஒரு சிலரின் நலனையும் கருத்தில் கொண்டு பணத்திற்காக ஆட்சி மாற்றம் நடைபெற்றது.

இந்த நான்கு வருட காலமும் அதை சரியான முறையில் பயன்படுத்த தவறியிருக்கிறார்கள். ஆகவே எங்கள் முன்னுள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்காக தான் விக்கினேஸ்வரன் ஐயா அவர்களின் தலைமையில் எம்மை போன்ற தோழமைக் கட்சிகள், கொள்கைளை ஏற்றுக் கொள்கின்ற பலரும் சேர்ந்து செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது.

நாங்கள் மாற்று தலைமைக்கான இந்த நிலமைக்கு தள்ளப்பட்டிருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கடந்த காலத்திலும், தற்போதும் விட்ட தவறுகள் ஆகும். ஆகவே தமிழ் மக்களுக்கு புதிய மாற்று அரசியல் தலைமை ஒன்று தேவை. அது விக்னேஸ்வரன் ஐயா அவர்களின் தலைமையில் தான் வடக்கிலும்,கிழக்கிலும், பல்வேறுபட்ட தரப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.

பல இளைஞர்கள் தமிழ் மக்கள் கௌரவமாக வாழ்வதற்காக ஆயுதம் ஏந்தி மடிந்துள்ளார்கள். ஆகவே எங்களது அரசியல், பொருளாதார உரிமைகளை வென்றெடுக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் எனத் தெரிவித்தார்.

-pagetamil-

Get real time updates directly on you device, subscribe now.

You might also like