நல்லூரில் இன்று மாலை இராணுவ அணி களமிறக்கம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் ஆலய சூழலில் மேலதிக இராணுவத்தினர் இன்று மாலை வரவழைக்கப்பட்டனர்.

7ஆம் திருவிழாவான இன்று (ஓகஸ்ட் 12) திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் நல்லூரில் இராணுவப் படை அணி ஒன்று கொண்டு வந்து இறக்கப்பட்டனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா கடந்த 6ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து 25 நாள்களுக்கு இடம்பெறும் திருவிழாவில் வழமை போன்று வீதித் தடைகள் போடப்பட்டன. எனினும் இம்முறை பொலிஸாரினால் சோதனையிடப்பட்ட பின்னரே பக்தர்கள் ஆலய திருவீதிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

பக்தர்களைச் சோதனையிடுவதற்கு மெடல் ஸ்கானர் தருவிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் அழைக்கப்பட்டுள்ளனர். வழமையாக இராணுவத்தினர் சோதனைச் சாவடிக்கு வெளியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் இன்று அவர்கள் சோதனைச் சாவடிகளுக்கு உள்ளே அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் தற்காலிக கூடாரங்கள் உள்ளிட்டவை காணப்பட்டன.

எதிர்வரும் நாள்களில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள நிலையில் பாதுகாப்புப் பலப்படுத்தப்படும் நிலையில் நல்லூர் ஆலய சூழலிலும் பாதுகாப்பு இறுக்கமாக்கப்பட்டுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like