சிறையிலிருந்து வெளியே வந்த நளினி இப்போது எப்படி இருக்கிறார்? என்ன செய்கிறார்?

சிறையிலிருந்து பரோலில் வெளிவந்திருக்கும் நளினி தன் மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்வதற்காக மனதையும் உடம்பையும் எந்த நேரமும் பிசியாகவே வைத்திருக்கிறார் என அவரின் தாயார் பத்மா தெரிவித்துள்ளார்.

தமிழக ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். குறித்த ஊடகத்திற்கு நளினியின் தாயார் வழங்கிய நேர்காணலில்,

கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே நளினிக்குக் கடவுள் பக்தி அதிகம். விநாயகர்தான் அவளோட இஷ்டதெய்வம். செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, பெளர்ணமி, அமாவாசைன்னு விரதம் இருப்பா.

சிறையில இருந்தப்போவும் எல்லா விரதங்களையும் ஃபாலோ பண்ணிட்டு வந்திருக்கா. இதோ, இப்ப பரோல்ல வந்தபிறகும் அப்படியே நாள், கிழமைன்னு எல்லா விரதமும் இருக்கா. அதனாலதான், ரொம்ப பலவீனமாயிட்டா.

சிறையில இருந்து வந்த அன்னிக்கு வெறும் ரசம் சாதம்தான் பண்ணிக்கொடுத்தேன். அடுத்த ரெண்டு நாள் சூப், கறி, மீன்னு செஞ்சு தந்தேன். அதுக்கப்புறம் நளினி என்னை சமையல்கட்டுப் பக்கமே போக விடுறதில்ல. நீ ரெஸ்ட் எடும்மா. எல்லா வேலையையும் நானே பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டா.

காலையில நாலரை, அஞ்சு மணிக்கெல்லாம் கண்விழிச்சிடுறா. யோகா பண்றா. ஆனா, ஒரு அம்மாவா அவளை கவனிச்சதுல நளினிக்கு மன அழுத்தம் நிறைய இருக்கும். பகல் முழுக்க வீட்டைப் பெருக்கறது, துடைக்கறது, தோட்டத்துச் செடிகளுக்கு தண்ணி ஊத்தறதுன்னு எந்நேரமும் ஏதோ ஒரு வேலையை செஞ்சுக்கிட்டே இருக்கா. மன அழுத்தத்தை சமாளிக்கத்தான் மனசையும் உடம்பையும் பிசியாவே வைச்சுக்கிறாபோல.

ஒரு கோயிலுக்குப் போக முடியலை; கடைத்தெருவுக்குப் போய் பிடிச்ச பொருளை வாங்க முடியலைன்னு வருத்தப்படறா.

வளர்த்தக் கதை, வாழ்ந்த கதைன்னு நிறைய பேசிக்கிட்டிருக்கோம். சின்ன வயசுல பல்லிக்கும் கரப்பான்பூச்சிக்கும் பயப்படுவா நளினி. இவ்வளவு போராட்டங்களுக்கு அப்புறமும் அவ இன்னமும் பல்லிக்கும் கரப்பானுக்கும் பயந்துக்கிட்டுதான் இருக்கா” என்று சிரிக்கிறார்.

நானும் என் பொண்ணும் சேர்ந்திருக்கிற மாதிரி, என் பொண்ணு அவ பொண்ணோட சேரணும். தன் குழந்தையோட ரெண்டு வயசு வரைக்கும்தான் கூட இருந்தா. அதுக்கப்புறம் தன் மகள் ஹரித்ராவை பிரிஞ்சேதான் இருக்கிறா. ஒரு அம்மாவா என் பொண்ணு ரொம்ப பாவம்.

இதேவேளை நளினியின் மகள் திருமணம் தொடர்பில் கருத்துரைத்துள்ள அவர்,

ஆடி மாசம் முடிஞ்சாதான் கல்யாணம் பற்றிய பேச்சுவார்த்தையே ஆரம்பிக்க முடியும். இலங்கையில நளினியோட மாமனார் புற்றுநோய் நாலாவது ஸ்டேஜில இருக்கார். அதனால, ஶ்ரீகரனோட அம்மா, உடன்பிறந்தவங்க எல்லோரும் அவர்கூடவே இருக்காங்க. அதனால, அவங்களால இப்போதைக்கு வர முடியாது.

இதேவேளை, பேத்திக்கு வர்ற செப்டம்பரில் பரீட்சை இருக்கிறதால அவ மும்முரமா அதுக்கு ரெடியாகிட்டிருக்கா என்றார்.