திடீர் சுகயீனம் காரணமாக 7 வயதுச் சிறுமி உயிரிழப்பு – மருத்துவ சேவை கிடைக்கவில்லை என்று உறவினர்கள் குற்றச்சாட்டு

புதுக்குடியிருப்பில் 7 வயதுச் சிறுமி திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த அலக்ஸ் அஸ்வினி (வயது-7) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார்.

சுகயீனமுற்ற சிறுமியை நேற்று (12) திங்கட்கிழமை புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் வைத்தியசாலை மருத்துவ சேவையாளர்கள் மீது உறவினர்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன் குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளனர்.

“சிறுமியை புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றபோதும் 20 நிமிடங்களாக அவருக்கு சிகிச்சை வழங்கப்படவில்லை. மருத்துவர் வருகை தரவில்லை என்று மருத்துவ சேவையாளர்கள் தெரிவித்தனர். அத்துடன், சிறுமிக்கான முதல் உதவியும் வழங்கப்படவில்லை. அதனால்தான் சிறுமி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது. புதுக்கடியிருப்பு வைத்தியசாலை மருத்துவ சேவையாளர்களின் அசண்டையீனத்தால்தான் சிறுமி உயிரிழந்தார்”என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் நிர்வாகத்தின் பதிலை அறியமுடியவில்லை.

சிறுமியின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவர் கே.சுதர்சனின் முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.