விடுதலைப் புலிகளின் தலைவருடைய வேண்டுகோளை தமிழர்கள் இப்போதும் ஏற்றுக் கொள்வதாக இருந்தால்..! மஹிந்த

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாவதையோ அவர் தலைமையிலான அரசு அமைவதையோ 2005ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் விரும்பியிருக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் வேண்டுகோளை தமிழ் மக்கள் இப்போதும் ஏற்றுக்கொள்கின்றார்கள் என்றால், ரணில் அரசுக்கு எதிராகவே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு மூன்று நாள் பயணமாகச் சென்றிருந்த ரணில் விக்ரமசிங்க, தமது தீர்வுத் திட்ட நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அத்துடன் மஹிந்த அரசை கொலைகார அரசு என்றும் சாடியிருந்தார். இது தொடர்பில் மஹிந்த ராஜபக்சவின் நிலைப்பாட்டை, வெளிநாட்டுச் செய்தி நிறுவனமொன்றின் கொழும்பு செய்தியாளர் வினவியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ச இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

ரணில் அரசை இனியும் நம்பி ஏமாறுவதற்கு தமிழர்கள் முட்டாள்கள் அல்லர். நான்கு ஆண்டுகளில் தீர்வுத் திட்டம் தொடர்பில் எதனையும் செய்து முடிக்காத இந்த ரணில் அரசா அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை இனி வழங்கப் போகின்றது?

சாக்குப்போக்குக்குப் புதிய அரசமைப்பு வரைவை மட்டும் சமர்ப்பித்து விட்டு குற்றங்களை எம் மீது சுமத்துவதில் எந்தப் பயனும் இல்லை.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாவதையோ அவர் தலைமையிலான அரசு அமைவதையோ 2005ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் விரும்பியிருக்கவில்லை.

அவருடைய வேண்டுகோளுக்கு அமைவாக ஒட்டுமொத்த தமிழ் மக்களும் அந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்திருந்தார்கள்.

புலிகளின் தலைவர் பிரபாகரனின் வேண்டுகோளை தமிழ் மக்கள் இப்போதும் ஏற்றுக் கொள்கின்றார்கள் என்றால், ரணில் அரசுக்கு எதிராகவே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும்.

அதற்காக 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நடந்ததைப் போன்று புறக்கணிக்க வேண்டும் என்று கோரவில்லை. அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

போரின்போது உயிரிழப்புக்கள் நடப்பது வழமை. அதற்காக எம்மைக் கொலைகார அரசு என்ற குற்றம் சுமத்தி ரணில் அரசு பரப்புரை செய்து வருகின்றது.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி – உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற மனிதப் படுகொலை யாருடைய ஆட்சியில் இடம்பெற்றது என்பதை ரணில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் எமது வேட்பாளர் வெற்றியீட்டி ஆட்சிக்கு வந்ததும் அடுத்து நடைபெறுகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எமது தலைமையிலான ஆட்சி அமைந்ததும் அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் அழைத்து அதேவேளை, தமிழ் மக்களின் சிவில் பிரதிநிதிகளையும் அழைத்து பேச்சு நடத்தி தீர்வுத் திட்டத்தை தயாரிப்போம்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியதுடன் தீர்வுத் திட்டத்தை தயாரிக்கும் பணிகள் ஆரம்பமாகும். நாடாளுமன்றத் தேர்தலில் எமது அரசு அமைந்ததும் அந்தப் பணி முடிவடையும்.

தீர்வுத் திட்டத்தை, தமிழ் மக்களுடன் கலந்துரையாடியே தயாரிப்போம். அலரிமாளிகைக்குள் தனி அறைக்குள் இரகசியமாக தீர்வுத் திட்டத்தை தயாரிக்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.