ஹரித்ரா திருமணம் தாமதம்.. நளினி மனுவை பரிசீலித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மகள் திருமணம் ஏற்பாட்டிற்காக வழங்கிய ஒரு மாத பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி நளினி தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் 52 வயதான நளினி, அவரது மகள் ஹரித்ரா திருமணத்திற்காக யூலை 25ம் திகதி முதல் ஒரு மாத பரோலில் உள்ளார்.

முன்னதாக, லண்டனில் இருந்த மகள் வருவதில் தாமதம் ஏற்படுவதால் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கும் படி உள்துறை செயலாளர் மற்றும் சிறைத்துறை தலைவர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தார். ஆனால், நளினியின் கோரிக்கையை ஏற்க சிறைத்துறை தலைவர் மறுத்துள்ளார்.

இந்நிலையில், மகள் திருமண ஏற்பாட்டிற்காக வழங்கிய ஒரு மாத பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக நாளை மறுநாள் ஆகஸ்ட் 22ம் திகதி பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

மேலும், 7 பேர் விடுதலை தொடர்பாக அளித்த மனுவை பரசீலிக்க கோரி நளினி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, திகதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.