ரணிலின் திட்டங்களை தவுடு பொடியாக்கிய சஜித்! திணறும் ஐதேக…! குழப்பத்தில் உறுப்பினர்கள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி பெரும் குழப்பத்தில் முடிவெடுக்க முடியாமல் திணறுவதாக அக்கட்சியை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் குழப்பத்திற்குப் பின்னர் மீண்டும் அரசமைத்த ரணில் தரப்பினால் தேர்தலுக்கான இலக்குகளை திட்டமிட்டு நகர்த்த முடியாத சூழல் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களினால் அரசுக்கு ஏற்பட்ட இழுக்கு மற்றும் பொருளாதார சரிவு, வேலைவாய்ப்பு இன்மை என்பன அக்கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கையில் தற்போது ஜனாதிபதி வேட்பாளர் தெரிவிலும் பெரும் தலையிடி ஏற்பட்டிருக்கிறது.

முன்னதாக பிரதமர் ரணில், நிதானமாக முடிவெடுக்க இருந்ததாகவும், அமைச்சரும் அக்கட்சியின் பிரதி தலைவருமான சஜித் பிரேமதாசவை ஓரம் கட்டிவிட்டு சபாநாயகர் கருஜய சூரியவையோ அல்லது வேறு ஒருவரையோ ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க முடிவு செய்ததாக தெரிகிறது.

ஆனால் ரணிலின் முடிவுக்காக காத்திருக்காத சஜித் பிரேமதாச தானே அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்றும் தான் தேர்தலுக்குத் தயாராகிவிட்டதாகவும் அறிவிக்கத் தொடங்கினார்.

எங்கெல்லாம் மேடைகள் கிடைக்கின்றதோ அங்கெல்லாம் தன்னுடைய முடிவை வெளிப்படையாக தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

ரணிலின் முடிவுக்காக காத்திருந்தால் சாதகமான பதில் கிடைக்காது என உட்கட்சியில் சஜித்திற்கு ஆதரவாக இருந்தவர்கள் தகவல் கொடுத்ததாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், சஜித்தை எதிர்ப்பதற்கு ரவி கருணாநாயக்க உட்பட்ட சில முக்கிய முன்னணி உறுப்பினர்களும் ரணிலின் நெருங்கிய சகாக்களும் இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க முடியாது என்பதை ரவி கருணாநாயக்க மிக வெளிப்படையாகவே தெரிவித்துவருகின்றார். இதற்கிடையில் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவும் சஜித்தின் பிரசார நடவடிக்கைகளை விமர்சனம் செய்துவருகின்றார்.

எனினும் இது தொடர்பில் இன்னமும் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவோ எந்தத் தகவல்களையும் இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை.

அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 50பேருக்கும் அதிகமானவர்கள் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இளம் உறுப்பினர்களின் ஆதரவும் சஜித்திற்கு அதிகரித்துக் கொண்டிருக்கையில் இறுதியும் உறுதியுமான முடிவினை அறிவிக்க முடியாத நிலையில் ரணில் தவிப்பதாக தெரிகிறது.

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் அறிவிக்கப்பட்டு ஜனாதிபதியாக தெரிவானால் பிரதமராக ரணில் நியமிக்கப்படுவார் என்று சஜித் ஏற்கனவே பொது மேடையில் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.

ஆனால் சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவி சஜித்திடம் செல்வதை அக்கட்சியின் தலைவர் ரணிலோ அல்லது அவருக்கு நெருக்கமான உறுப்பினர்களோ விரும்பவில்லை. இதன்பொருட்டு பெரும் தயக்கத்தில் இருக்கிறார்கள்.

மிக இலகுவாக அமைதியாக ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்து தேர்தலை எதிர்நோக்கலாம் என்றும், சஜித்தை சமாதானப்படுத்தி தனக்கு சாதாகமான அல்லது தனக்கு நெருக்கமானவரை வேட்பாளராக்கலாம் என்று கணக்குப் போட்ட ரணிலின் திட்டத்தை புரிந்து கொண்ட சஜித் சுதாகரித்துக் கொண்டு முந்திக் கொண்டு தன் இராஜதந்திரத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார் என்கின்றன தகவல் அறிந்த வட்டாரங்கள்.

மகிந்த தரப்பினர் தங்கள் வேட்பாளர் கோத்தபாய தான் என்று வெளிப்படையாக அறிவித்த நிலையும் ரணிலால் இந்த முடிவினை வெளிப்படையாக அறிவிக்க முடியாத இக்கட்டான நிலையில் இருக்கிறார். கட்சி உறுப்பினர்களும் ஆளுக்கொரு திசையாக இருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அமைச்சர் சஜித்திற்கு ஆதரவு என்பதை ஏற்கனவே பல இடங்களில் மறைமுகமாக வெளிப்படுத்தியிருக்கிறார். முன்னதாக பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு சஜித்திடம் கோரியிருந்தார் மைத்திரி.

இந்நிலையில் மைத்திரி சஜித் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது தொடர்பில் மைத்திரி சஜித் எந்தத் தகவல்களையும் வெளியிடவில்லை.

எதுவாயினும் இப்போதைக்கு ஐக்கிய தேசிய கட்சியும் ரணிலும் பெரும்குழப்பதில் இருக்கிறார்கள். ஆனாலும் சஜித் தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறார். கோத்தபாயவை எதிர்க்க முடியும் வெற்றி பெறமுடியும் என்ற நம்பிக்கை சஜித்திற்கு, கட்சிப் பதவியும் அதிகாரங்களும் பறிபோய் விடும் என்னும் மனக்கவலையில் ரணில்.

எது சாத்தியம் என்பதை இன்னமும் இரண்டொரு வாரங்களில் தெளிவாகிவிடும்.