பெரும் ஆபத்தில் இந்தியா? வெளியாகும் எச்சரிக்கை தகவல்கள்!

இந்திய நாடு இன்று எதிர்கொண்டுள்ள பொருளாதாரச் சரிவும் அதன் விளைவாக இந்நாட்டு மக்கள் எதிர்கொண்டுவரும் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களும் இந்நாட்டின் பொருளாதார எதிர்காலம் தொடர்பான ஆழமான கவலைகளை உருவாக்கியுள்ளது.

“இந்தியா ஒரு மெளன நிதிச் சிக்கலை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கிறது” என்று பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைப் பேரவையின் உறுப்பினர் ரத்தின் ராய் கூறியதும், நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதையும் குறிப்பிட்டு ஒரு மாதத்திற்கு முன்னரே எனது முகநூலில் பதிவிட்டிருந்தேன்.

ஆனால் இந்திய ஒன்றிய அரசின் நிதியமைச்சரோ அல்லது பிரதமரோ அப்படி ஒரு நிலையை இந்நாடு எதிர்கொண்டிருப்பது பற்றி ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் வாகன உற்பத்தி உள்ளிட்ட சில துறைகளில் மந்த நிலை இருப்பதை மட்டும் ஒப்புக்கொண்டு, அதற்கு தற்காலிமான நிவாரணங்களை அளிப்பதற்கான ஆலோசனையில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள் இந்நாடு ஒரு பெரும் பொருளாதாரச் சரிவை நோக்கிச் சென்றுக்கொண்டிருப்பதை ஐயத்திற்கு இடமின்றி பறைசாற்றி வருகின்றன.

கார், சரக்கு வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் என்று வாகன உற்பத்தி இதுவரை கண்டிராத அளவிற்கு தொடர்ந்து பல மாதங்களாக குறைந்து வருகிறது. இதன் விளைவாக தங்களது உற்பத்தியை மாருதி சுசூகி, டாடா, ஹூண்டாய், மகேந்திரா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பலவும் குறைத்துள்ளன. உற்பத்தி விடுமுறை (Production Holiday) என்று கூறி வாரத்தில் 2, 3 நாட்கள் தொழிலக உற்பத்தியை நிறுத்தியுள்ளன.

இதன் காரணமாக இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் மட்டும் வாகனத் தொழிலில் 3.5 இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். மாருதி சுசூகி நிறுவனம் மட்டும் 3,000 ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இந்நாட்டின் முதன்மை கார் உற்பத்தி நிறுவனம் மாருதி சுசூகி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வாகனங்களை விற்பனை செய்யும் முகவர் நிறுவனங்கள் பலவும் தங்களுடைய காட்சியகங்களை (Show rooms) மூடியுள்ளன. இதனால் அதில் வேலையில் இருந்தோரும் இன்று வேலையிழந்துள்ளனர். மராட்டிய மாநிலம் பூனேயிலுள்ள பிம்பிரி – சின்ச்வாட் பகுதியில் மட்டும் 5 இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இங்கு இந்நாட்டின் பெரிய வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் மட்டுமின்றி அவற்றிற்கு உபரி பாகங்களை உற்பத்தி செய்துத்தரும் சிறு குறு தொழிற்சாலைகள் மூடப்படும் நிலைக்கு வந்துள்ளன.

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இயங்கிவரும் தரத்திற்குப் பெயர் பெற்ற வாகன உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்களான லூக்காஸ் டிவிஎஸ் மற்றும் சுந்தரம் ஃபாஸனர்ஸ் நிறுவனங்கள் உற்பத்தி விடுமுறை செய்துள்ளன.

இது ஏதோ வாகன உற்பத்தி சார்ந்த பின்னடைவு என்றும் அது தேவைக்கும் உற்பத்திக்கும் இடையிலான முரண் (deman supply mis-match) என்றும் வர்ணிக்கப்படுகிறதேயன்றி, அது ஏன் ஏற்பட்டது என்பதற்கு மெய்யான விளக்கம் கிடைக்கவில்லை. சரி வாகன உற்பத்தித் துறையில் மட்டும்தான் இப்படிப்பட்ட நிலையா?

பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பார்லே 10,000 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யும் நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. பொருளாதார மந்த நிலை காரணமாகவே இந்நிலை தோன்றியுள்ளது என்று கூறும் அந்நிறுவனம், அதிக விலையுள்ள பிஸ்கட் பாக்கெட்டுகளின் மீது விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

ரூ.5.00க்கு விற்கப்படும் பிஸ்கட் பாக்கெட்டுகளின் விற்பனை பெருமளவிற்கு சரிந்துள்ளது என்று கூறுகின்றனர். சாதாரண வருவாய் உள்ள குடும்பத்தினர் வாங்கிச் செல்லும் மிகக் குறைந்த விலையுள்ள பிஸ்கட் பாக்கெட்டுகள் விற்பனை சரிந்துள்ளது மிகுந்த அபாயகரமான அறிகுறியாகும்.

கடந்த நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் 5.8% ஆக மட்டுமே இருந்த பொருளாதார (ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி – ஜிடிபி) வளர்ச்சி இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.5 முதல் 6% விழுக்காட்டிற்கு உட்பட்டதாகவே இருக்கும் என்று எரிசக்தி அமைச்சகச் செயலாளர் சுபாஷ் கார்க் கூறியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கதாகும். ஆனால் இந்திய மைய வங்கி (ஆர்பிஐ) பொருளாதார வளர்ச்சி 6.9% ஆக இருக்கும் என்று கூறியுள்ளது!

ஆக மேற்கண்ட விவரங்கள் யாவும் இந்நாடு ஒரு பெரும் பொருளாதாரச் சரிவில் சென்றுக் கொண்டிருப்பதையே சுட்டிக்காட்டுகிறது. பொருளாதாரம் வளர்கிறது என்று ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விழுக்காட்டைக் கூறி அரசு சமாளித்தாலும், அந்த வளர்ச்சியால் வேலை வாய்ப்புகள் கிஞ்சித்தும் பெருகாததை இந்நாடு கண்டு வருகிறது. மற்றொரு பக்கள் தொழிலக உற்பத்திச் சரிவால் பல இலட்சக்கணக்கானோர் வேலை இழந்துவரும் அவலம்.

தொழிலக உற்பத்தியைக் கூட்ட வேண்டுமெனில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு உதவிடும் வகையில் அவைகளுக்கு தேவையான குறுகிய கால கடன் வழங்க வேண்டும். ஆனால் கடனளிக்க முடியாத நிலையில் இந்நாட்டின் வங்கிகள். காரணம் மீட்டெடுக்க முடியாத அளவிற்கு பெருகியுள்ள வாராக் கடன் சுமை.

வளர்ச்சியை ஊக்கப்படுத்த வேண்டுமென்றால் முதலீடுகள் அவசியம். ஆனால் அதற்கான நிதி ஆதாரம் இந்திய ஒன்றிய அரசிடம் இல்லை. அதைவிட முக்கியம் இந்நாட்டு மக்களின் சேமிப்பால் பெரும் மூலதனம் (Capital formation). இது கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்திய ஒன்றிய அரசு தனது நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டவே பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று சமாளித்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் மட்டுமல்ல சொத்துக்களும் விற்கப்படுகின்றன. கட்டாய ஓய்வுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வேலை பறிக்கப்படும் நிலை ஒரு பொதுத் திட்டமாகவே பொதுத்துறை நிறுவனங்களின் மீது திணிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் பெரும் வேலை வாய்ப்பை உருவாக்கி அளித்த பொதுத்துறை நிறுவனங்கள் பலவும் முதலீடு விலக்கல் கொள்கையால் தனியார் மயமாக்கப்பட்டு மலடாக்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட சூழலில் நாட்டின் பொருளாதாரம் எந்த வகையில் வளரும்? எப்படி வேலை வாய்ப்புப் பெருகும்? எதை வைத்து உத்தரவாதம் தர முடியும்?

“இந்நாடு தனது வளத்தை முழுமையாகப் பயன்படுத்துவதால் மட்டுமே இச்சிக்கலில் இருந்து விடுபட முடியும்” என்று கூறியுள்ள கார்க், ஒரு எடுத்துக்காட்டையும் கூறியுள்ளார். நமது நாட்டிற்குத் தேவையான அளவிற்கு நிலக்கரி இருப்பு உள்ளது. நமது தேவை 100 கோடி டன் என்றால் நாம் வெட்டியெடுப்பது 60 கோடி டன்களாக மட்டுமே உள்ளது. அதற்கு மேலான தேவையை இறக்குமதி செய்கிறோம். இது மாற வேண்டும். நமது உற்பத்தி 110 கோடி டன்னாக உயருவதுதான் வழி என்று கூறியுள்ளார்.

இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவை நீக்க தொழில்துறைக்கு ஊக்கச் சலுகைகளை அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கை பிழையானது என்று கூறியுள்ள தலைமைப் பொருளாதாரா ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியம், இந்நாடு கடைபிடித்து வரும் சந்தைப் பொருளாதாரத்தில் மக்கள் அளிக்கும் வரிப் பணத்தில் இருந்து நலிவுறும் தொழில்களைத் தூக்கி நிறுத்த ஊக்கச் சலுகைகளை அரசு அளிப்பது என்பது ‘தார்மீக ஆபத்து’ என்று கூறியுள்ளார். ஆனால் வரிச் சலுகை மற்றும் வரி விட்டுத் தருதல் போன்ற வழிமுறைகளில் கடந்த காலங்களில் பல இலட்சம் கோடி மக்கள் வரிப்பணத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இந்திய ஒன்றிய அரசு அள்ளி வழங்கியது என்பதை மறந்துவிட முடியுமா?

உலக அளவில் பொருளாதார மந்த நிலை நிலவுகிறது, அதுவே இந்நாட்டிலும் எதிரொலிக்கிறது என்று கூறப்படுவது ஒரு தப்பித்தல் வாதமே. இந்நாடு சந்தித்துவரும் பொருளாதாரச் சிக்கலுக்கும் கடந்த கால் நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக இந்நாட்டரசு கடைபிடித்துவரும் சந்தைப் பொருளாதாரப் பாதையால் இந்நாட்டின் பொருளாதாரம் எந்தெந்த வகையில் பலன் பெற்றது? அந்தப் பலன் இந்நாட்டு மக்களின் வாழ்வில் என்ன மேம்பாட்டை ஏற்படுத்தியது? என்பதையெல்லாம் ஆழ்ந்து ஆராய்ந்திட வேண்டிய ஒரு கட்டத்திற்கு நாம் வந்துள்ளோம்.

ஆனால் நமது நாட்டின் நாடாளுமன்ற அவைகள் முதல் தொலைக்காட்சிகள் வரை பொருளாதாரச் சிக்கல்களை அவசரக் கதியில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி நிகழவில்லையே? இப்படிப்பட்ட முக்கியப் பிரச்சனை விவாதிக்கப்படாமல் அதற்கு மாறாக அல்லது அதனை மறைக்கும் வகையில் பல்வேறு அன்றாட அரசியல் ரீதியான சர்ச்சைகள் விவாதிக்கப்படுவது உண்மையை நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ஜனநாயகப் பொறுப்புணர்வுக்கு எதிரானதல்லவா?

பத்திரிகைகளும் ஊடகங்களும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

கா. அய்யநாதன். ஆகஸ்ட் 23, 2019