இரகசியம் கசிவு – தனக்கு நெருக்கமானவரை தேடி அலையும் கோத்தபாய

கோத்தபாய ராஜபக்சவும் அவரது மனைவி அனோமாவும் கடந்த 2005ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கை வந்து, இலங்கையின் குடியுரிமை இல்லாத நிலையில், அந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எப்படி வாக்களித்தனர் என்பது குறித்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இலங்கை பிரஜைகள் அல்லாத இரண்டு பேரின் பெயர்களை 2004ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் சேர்த்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விடயம் சம்பந்தமான தகவலை கட்டாயம் தனக்கு மிக நெருக்கமான ஒருவரே கசிய விட்டிருப்பார் என்ற பலத்த சந்தேகம் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமான முறைப்பாடு பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்திருப்பதை அறிந்துக்கொண்ட கோத்தபாய, கடும் குழப்பத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முறைப்பாடு கிடைத்த தினத்தில் இருந்து கோத்தபாய ராஜபக்சவின் நண்பர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பொலிஸ் தலைமையகத்துடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டுள்ளனர்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இடைநடுவில் நின்றுள்ள நிலையில், கோத்தபாய ஏனைய வேலையை கைவிட்டு, தனது கடந்தகால தகவலை வெளியில் கசிய விட்ட தனக்கு நெருக்கமானவரை தேடி வருகிறார்.

தனக்கு நெருக்கமான ஒருவர் இந்த தகவலை வெளியில் கசிய விடவில்லை என்றால், 15 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்த சம்பவம் தற்போது வெளியில் வர வாய்ப்பில்லை என கோத்தபாய தனக்கு நெருக்கமானவர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக பேசப்படுகிறது.

இந்த சம்பவம் காரணமாக கடும் வெறுப்படைந்துள்ள கோததபாய, “ இப்படி நடக்கும் போது எப்படி இவர்களுடன் இருப்பது, எப்படி இவர்களுடன் வாழ்வது?. எப்படி வேலை செய்வது?. தற்போதே இப்படி என்றால், எதிர்காலத்தில் என்ன நடக்குமோ?.

வெளியில் உள்ளவர்கள் இதனை செய்திருக்க வாய்ப்பில்லை. ஒருவர் மீது எனக்கு பலத்த சந்தேகம் உள்ளது. பார்ப்போம். இதனை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. தொடர்ந்தும் இப்படி நடந்தால், எங்கு போய் முடியுமோ யாருக்கு தெரியும் ” என தனது நண்பர்களிடம் கூறியுள்ளார்.