கோத்தபாயவை நாடாளுமன்ற உறுப்பினராக்க முயற்சி? மைத்திரியிடம் மகிந்த விடுத்துள்ள கோரிக்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சவை தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், மகிந்த ராஜபக்ச கோரியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றுக்கு, அந்தக் கட்சியின் 19 உறுப்பினர்களுக்கிடையில் போட்டி உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சாந்த பண்டார அண்மையில் பதவி விலகியிருந்தார்.

இதையடுத்தே, தம்மை அந்தப் பதவிக்கு நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 19 உறுப்பினர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

எனினும், இந்த ஆசனத்துக்கு யாரை நியமிப்பது என்று ஜனாதிபதி இன்னமும் முடிவு எடுக்கவில்லை.

இதுதொடர்பாக இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

அதேவேளை, இந்த தேசியப் பட்டியல் ஆசனத்தின் மூலம் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விருப்பம் வெளியிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதுபோல, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்சவை இந்த தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், மகிந்த ராஜபக்ச கோரியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, அண்மையில் காலமான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசநாயக்கவின் இடத்துக்கு யாரை நியமிப்பது என்ற இழுபறியும் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆசனத்தை பெறுவதற்காகவே, சாந்த பண்டார தேசியப் பட்டியல் ஆசனத்தில் இருந்து விலகியிருந்தார். எனினும், அது சட்டப்படி செல்லாது என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கூறியிருந்தார். இதனால், இதுபற்றி சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.