உத்தியோகபூர்வமாக தனது முடிவை வெளியிட்ட அமைச்சர் சஜித்

இன்றையதினம் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய கூட்டத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்காக தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு 18 அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன.

குறித்த 18 அணிகளுக்குமான பொறுப்புக்கள் இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அடுத்த வாரமளவில் ஐக்கிய தேசியக் கட்சி விரும்பியோ அல்லது விரும்பாமலோ அமைச்சர் சஜித் பிரேமதாசவினை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கவேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரம் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மையான உறுப்பினர்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளமை மறைமுகமாக பேணப்பட்டு வருகின்றது.

அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தந்தை ரணசிங்க பிரேமதாச 1988ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நியமிக்கப்படுவதற்கு கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் கோசம் பிரதான காரணமாக இருந்தது.

ரணசிங்க பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குமாறு அடிமட்ட தொண்டர்கள் எழுப்பிய கோசங்களுக்கு அன்றைய ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜயவர்தன மறுப்பு தெரிவித்திருந்தார்.

எனினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் ஜே.ஆர்.ஜயவர்தன இறுதியில் ஜனாதிபதி வேட்பாளராக ரணசிங்க பிரேமதாசவை களமிறக்கினார். இதில் கட்சியின் அதிகபட்சமான ஆதரவு ரணசிங்க பிரேமதாசவுக்கு கிடைக்கப்பெற்றமையே காரணமான அமைந்தது.

அதே போன்றதொரு சூழலே தற்போதும் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியில் அதேபோன்ற ஒரு மோதல் நிலையே இன்றும் இருக்கின்ற சூழலில் தந்தையைப்போன்று பல சர்ச்சைகளுக்கு மத்தியில் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவார் என தென்னிலங்கை அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

தந்தைக்கு ஏற்பட்ட இக்கட்டான ஒரு நிலையிலேயே தற்போது சஜித் பிரேமதாசவும் இருக்கின்ற சூழலில், ஐக்கிய தேசியக் கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் சஜித்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான ஒரு சூழலில் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளது.

அத்தோடு, இன்று இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாச தெளிவாக தனது நிலைப்பாட்டை எடுத்துரைத்துள்ளார். எதிர்காலத்தில் தான் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் தனது திட்டங்கள் குறித்து தெளிவான ஒரு விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.

எனவே ஐக்கிய தேசியக் கட்சி தனது நிலைப்பாட்டை, ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பான தனது முடிவை எப்போது அறிவிக்கும் என்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது.