நாடு கடத்தப்பட்ட தமிழ் தம்பதியினர்! இறுதி நேர திக் திக் நிமிடங்கள் – நடுவானில் அவுஸ்திரேலியா நோக்கி திரும்பும் விமானம்

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழ் குடும்பத்தினை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சிகளை நீதிமன்றம் இறுதி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது.

நடேசலிங்கம் பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும் விசேட விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்ட பின்னர் நீதிமன்றம் அவர்களை வெளியேற்றும் தடை உத்தரவை பிறப்பித்தது என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், நீதிமன்ற உத்தரவு கிடைப்பதற்கு முன்னரே விமானம் புறப்பட்டுவிட்டதாகவும், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து விமானம் நடுவானில் டார்வினிற்கு திரும்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தமிழ் தம்பதியினரை வரவேற்க பலர் காத்திருப்பதாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மெல்பேர்னில் சுமார் 15 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்தும் நோக்கில் சிறப்பு விமானமொன்று அவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளது.

நடேசலிங்கம்-பிரியா குடும்பம் தம்மை அவுஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களும், அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டதையடுத்து குறித்த குடும்பம் பலரது எதிர்ப்பையும் மீறி விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளது.

மெல்பேர்ன் விமான நிலையம் ஊடாக இடம்பெற்ற இந்நாடு கடத்தலைத் தடுப்பதற்கு அகதிகள் செயற்பாட்டாளர்களும், நலன் விரும்பிகளும் பல எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில் குறித்த குடும்பத்தை ஏற்றிக்கொண்டு விமானம் புறப்பட்டுள்ளது.

நடேசலிங்கம் பிரியா தம்பதியினரின் சட்டத்தரணி கரீனா போர்ட்டின் சட்டத்தரணி மேற்கொண்ட அவசர முயற்சிகளை தொடர்ந்து நீதிமன்றம் தமிழ் குடும்பத்தை வெளியேற்றுவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

நீதிபதியொருவர் தொலைபேசி மூலம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இன்று அதிகாலை 2 (உள்ளூர்) மணியளவில் குறித்த விமானம் டார்வினை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் தம்பதியினரை வரவேற்க பலர் காத்திருப்பதாகவும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பிரியாவை அதிகாரிகள் பலவந்தமாக விமானத்திற்குள் இழுத்து சென்றதாக, விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அந்நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் இது குறித்தும் அக்கறையின்றி பிரியாவை இழுத்துச்சென்றனர், அவர் கதறினார் இரு குழந்தைகளும் கதறினார்கள் அங்கு மிகவும் மனதை தொடும் சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.