பொலிஸாரிடம் சண்டித்தனம் செய்த பெண் பிரதேச சபை உறுப்பினர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

ஐக்கிய தேசியக் கட்சியின் வென்னப்புவை பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது சகோதரி ஆகியோரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மாரவில மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமான தெம்மியசிறி பெரேரா இன்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 19 ஆம் திகதி லுனுவில சிறிகம்பள சினோர் சந்திப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த வென்னப்புவை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொலிஸாரை திட்டி, கடமையை செய்ய விடாது தடுத்த சம்பவம் தொடர்பாக இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வென்னப்புவை பிரதேச சபை உறுப்பினரான சிறிகம்பள தும்மோதர பிரதேசத்தை சேர்ந்த வர்ணகுலசூரிய துலக்ஷி சமோதரி பெர்னாண்டோ மற்றும் அவரது மூத்த சகோதரியான வர்ணகுலசூரிய சுபுனி துலாஞ்சலி பெர்னாண்டோ ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரதேச சபை உறுப்பினரின் தந்தையான வர்ணகுலசூரிய அசோக் பெர்னாண்டோ மற்றுமொரு சகோதரியான வர்ணகுலசூரிய நிமாஷா நவாஞ்சலி பெர்னாண்டோ ஆகியோர் தலா மூன்று லட்சம் ரூபாய் பெறுமதியான உறுதிப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வென்னப்புவை பொலிஸார் வழக்கை நெறிப்படுத்தி வருகின்றனர்