யாழ் வீடொன்றில் திருமண வீடியோவுடன் நுழைந்தவர்கள் – அதன்பின்னர் நேர்ந்த விபரீதம்!

யாழ்.நவாலி கொத்துக்கட்டி பகுதியில் உள்ள புகுந்த கொள்ளையா்கள் வீட்டிலிருந்தவா்களை துன்புறுத்தியுள்ளதுடன், புதிதாக திருமணனான பெண்ணிடம் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை காட்டி தாலி கொடி உள்ளிட்ட 60 பவுண் நகை கொள்ளையிட்டு சென்றுள்ளமை பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று அதிகாலை 1.30 மணியளவில் 5 பேர் கொண்ட திருட்டுக்கும்பல் வீட்டின் முன்வாயில் வழியாகவும் சமையல் அறையின் மேற்பகுதி வழியாகவும் வீட்டுக்குள் நுழைந்தது.

அங்கு வீட்டில் இருந்த ஒருவரை கட்டிவைத்துவிட்டு அங்கு நடைபெற்ற திருமண நிகழ்வின்வீடியோ ஒளிப்பதிவை காண்பித்து தங்க ஆபரணங்களை தருமாறு கத்தி முனையில் அச்சுறுத்தியுள்ளனர்.

அவர்களின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாததால் வெளிநாட்டில் இருந்து வந்தவர் மீது வாளால் வெட்டி தாக்கியபோது, பெண்ணொருவர் சகல நகைகளையும் எடுத்து தருவதாக கூறியதை அடுத்து ஒவ்வொரு இடமாகத் தேடிய கொள்ளையர்கள் அனைத்து நகைகளையும் கொள்ளையிட்டுள்ளனர்.

இந்நிலையில் கும்பலின் செயற்பாடு தொடர்பில் திருமண வீட்டின் மணமகளால் கைத்தொலைபேசி மூலம் குறுந்தகவல் மூலம் தெரியப்படுத்தியதன் பயனாக அயல்வீ்டுக்காரர் ஒருவர் ஏனையவர்களுக்கு தகவல் வழங்கியதை அறிந்த கொள்ளைக்கும்பல் வெளியில் நின்ற அயல்வீட்டுக்கார நபரை வெட்டிக்காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

சம்பவத்தில் வீட்டில் இருந்தவர்களின் 60 பவுணுக்கு மேற்பட்ட தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதுடன் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் கடவுச் சீட்டுக்களும் கைப்பைகளையும் கொள்ளையர்கள் எடுத்துச்சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.