பிரித்தானியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த நபர் ஒருவர் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தில் தனது தம்பியால் ஏமாற்றமடைந்த அண்ணன் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
லண்டனிலிருந்து தனது தம்பிக்கு அனுப்பிய இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை ஏமாற்றியதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
எஸ்.மாதவன் என்பவர் கடந்த 12 வருடங்களுக்கு முன்னர் பிரித்தானியாவுக்கு சென்று தொழில் செய்து வந்துள்ளார். அவர் தனது சொந்த இடமான சாவகச்சேரியில் வீடு ஒன்றை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளார்.
வீட்டினை நிர்மாணிக்கும் பொறுப்பினை தனது தம்பியிடம் கொடுத்துள்ளார். அதற்கு தேவையான பணத்தையும் வழங்கியுள்ளார்.
அண்ணனின் காணியில் வீடு அமைக்கப்பட்டுள்ளதாக சில புகைப்படங்களை லண்டனிலுள்ளவருக்கு தம்பி அனுப்பி வைத்துள்ளார்.
எனினும் தனது புதிய வீட்டை பார்க்க யாழ்ப்பாணம் வந்த அண்ணனுக்கு பெரும் அதிர்ச்சி மட்டுமே காத்திருந்தது. தம்பி தனது காணியில் தனக்கான வீட்டினை கட்டியுள்ளதுடன், இரண்டு கோடிக்கு மேலாக பணத்தை மோசடி செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக மனமுடைந்த லண்டன் அண்ணன் தற்கொலை முயன்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.






