கடல் நீரில் மூழ்கும் அபாயத்திலுள்ள தீவு! இலங்கை தயார் நிலையில் உள்ளதாக கூறுகிறார் பிரதமர்

இலங்கைக்கும், மாலைதீவுக்கும் இடையில் 4 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைத்திடப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

மாலைதீவு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று மாலை மாலைதீவு ஜனாதிபதி மாளிகையில் அந்த நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதனையடுத்தே புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான விசா வழங்கலை மேலும் சுலபமாக்குதல், சமூக பாதுகாப்பு, உயர்கல்வி, தொழிற்பயிற்சி, இளைஞர் அபிவிருத்தி ஆகிய துறைகள் தொடர்பாக இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதனிடையே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் மாலைதீவு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியுள்ளார்.

இலங்கை 25 ஆண்டுகள் பயங்கரவாதத்தினால் கஷ்டங்களை அனுபவித்தது. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு கடந்த ஈஸ்டர் ஞாயிறு நடத்திய பயங்கரவாத தாக்குதலில் சாதாரண பயங்கரவாதத்தை விட வெளிப்படையாக தெரியும் மாற்றங்கள் இருந்தன.

இந்த அனர்த்தமான அனுபவத்தில் நாங்கள் பல பாடங்களை கற்றுக் கொண்டோம். ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதலை எதிர்கொள்ள பிராந்திய ரீதியான அனைத்து தரப்பினருடனும் ஒன்றாக இணைந்து செயற்பட இலங்கை தயாராக உள்ளது.

தற்போது காலநிலை அனர்த்தங்கள் அனைவரையும் பாதித்துள்ளது. இது விட்டு விலக முடியாத அச்சுறுத்தல்.

அத்துடன் மாலைதீவு கடல் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. கடல் மட்டம் உயர்தல் மற்றும் பச்சை வீட்டு விளைவுக்கு எதிராக மாலைதீவு மேற்கொண்டு வரும் போராட்டத்திற்கு எந்த விதமான உதவிகளை செய்யவும் இலங்கை தயாராக இரு்ககின்றது என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்.

இந்த விடயங்கள் தொடர்பாக சர்வதேச மாநாடு ஒன்றை கூட்ட இணைந்து செயற்படுவோம் என ஜனாதிபதி சோலியிடம் யோசனை முன்வைப்பதாகவும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.