பளை வைத்திய அதிகாரி கோட்டாபயவை கொல்ல முயன்றாரா? சிங்கள செய்தியாளர் சிக்கலில்

பயங்கரவாதப்பிரிவில் தடுத்துவைக்கபட்டுள்ள பளை வைத்திய அதிகாரி சிவரூபன் பிரமுகர்களை கொல்ல திட்டமிட்டதாக செய்தி புனைந்த வவுனியாவை சேர்ந்த செய்தியாளர் பயங்கரவாத விசாரணை பிரிவில் சுமார் 6 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபின் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியர் சிவரூபன் தொடர்பான குறித்த செய்தி சிங்கள பத்திரிகை ஒன்றில் வெளியாகியிருந்தது.

கடந்த மாதம் 29ம் திகதி வெளியான அந்த செய்தியை, வவுனியாவை சேர்ந்த சிரேஷ்ட சிங்கள செய்தியாளர் தினசேன ரத்துகமவே அனுப்பி வைத்திருந்தார்.

குறித்த செய்தியால் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான செய்தியை வெளியிட்டார் என தெரிவித்து, அவரை விசாரணை செய்யும் அனுமதியை கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் அழைப்பாணை பெறப்பட்டு கொழும்பு பயங்கரவாதத்தடுப்பு விசாரணைப்பிரிவிற்கு அழைக்கப்பட்டு 6மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் குறித்த செய்தியாளர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் அவர் இந்த விசாரணை எதிர்கொண்டிருந்தார்.

பளை வைத்திய அதிகாரி சிவரூபன் கோட்டாபயவை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை வைத்திருப்பதாகவும் அவரால் அனுப்பப்பட்ட செய்தி தொடர்பாகவே குறித்த ஊடகவியலாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.