நான் சொன்னதனால்தான் விடுதலைப்புலிகள் செத்தார்களா?: நான் கடவுளுமில்லை; முரளிதரன் மீண்டும் சர்ச்சை பேச்சு?!

நான் சொன்னதனால்தான் விடுதலைப்புலிகள் செத்தார்களா? அதனால நான் சொல்லுறதுதான் வேதவாக்கு இல்லை, நான் கடவுளுமில்லை, நான் ஒரு சாதாரண கிரிக்கெட் வீரர் அவ்வளவுதான், நான் விடுதலைப்புலிகள் இறந்ததை மகிழ்ச்சியென்று சொல்லவில்லையே என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் கொழும்பு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, சமாதான பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப் புலிகளுக்கு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அவர்கள் அப்பாவிகளை கொலை செய்தனர், 2009-இல் யுத்தம் முடிவிற்கு வந்த பின் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் என முத்தையா முரளிதரன் தெரிவித்திருந்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் குறித்த சர்ச்சை தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே முரளிதரன் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.,

இந்த நாட்டில் வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில் எந்த மாதிரி வேட்பாளர் வரவேண்டும்? அவர் யாரென்று கேட்டார்கள், எனக்கு பெயர் சொல்ல முடியாது கடந்த கால வரலாற்றில் தமிழர்கள் பயத்திலிருந்தார்கள் ஆரம்பத்தில் அரசாங்கத்தில் பிழையிருந்தது, பின்னர் யுத்தம் நடந்துகொண்டிருந்தது அப்போது விடுதலைப்புலிகளின் பக்கம் பிழையிருந்தது, இரண்டு தரப்பிலும் பிழையிருந்தது பின்பு கடந்த 2009-ம் ஆண்டு யுத்தம் முடிவிற்கு வந்தது, அதன் பின்னர் மக்களின் பயம் போயிருந்தது, பின்னர் 2019 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்த பின்னர் மீண்டும் மக்கள் மத்தியில் அச்சம் நிலவியிருக்கிறது.

இந்நிலையில் யாரு தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி மக்களின் அச்சத்தை போக்குவாரோ அவருக்கே எனது வாக்கை செலுத்துவேன், நீங்கள் வாக்களிப்பது உங்களுடைய விருப்பம், இதுதான் அன்றையதினம் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் கூறிய பதில், இதில் எங்கையாவது நான் விடுதலைப்புலிகள் நல்லம் கூடாது என்று நான் சொன்னேனா.?

நான் அரசியலுக்கு வரப்போவதில்லை, நான் நாட்டை ஆளப்போவதும் இல்லை, ஒரு மனிதனாக கேட்கப்பட்ட கேள்விக்கு நான் பதிலளித்தேன், நான் சொன்னதனால்தான் விடுதலைப்புலிகள் செத்தார்களா? அதனால நான் சொல்லுறதுதான் வேதவாக்கு இல்லை, நான் கடவுளுமில்லை, ஜனாதிபதியுமில்லை நான் ஒரு சாதாரண கிரிக்கெட் வீரர் அவ்வளவுதான், நான் விடுதலைப்புலிகள் இறந்ததை மகிழ்ச்சியென்று சொல்லவில்லையே என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.