யாழில் மோட்டார்சைக்கிளில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த கதி! வீதியில் வைத்து தாக்கப்பட்ட கணவர்

யாழ். வட்டுக்கோட்டை, சங்கரத்தை பகுதியில் மோட்டார்சைக்கிளில் கணவருடன் பயணித்த பெண்ணொருவர் விபத்திற்கு இலக்காகியுள்ளார்.

குறித்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், வட்டுக்கோட்டையிலிருந்து சித்தன்கேணிக்கு கணவருடன் பயணித்த பெண்ணே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளார்.

சங்கரத்தை பகுதியில் வைத்து மோட்டார்சைக்கிளின் சில்லிற்குள் பெண்ணின் சேலை சிக்கியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தையடுத்து தலையில் பலத்த காயத்துடன் அந்த பெண் நோயாளர் காவு வண்டி மூலமாக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கணவரும் அந்த வைத்தியசாலைக்கு செல்ல முற்சிக்கையில், அங்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சம்பவம் தொடர்பான விசாரணை என கூறி அவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை பொலிஸ் நிலையம் எடுத்துச் செல்ல தருமாறு கோரியுள்ளனர்.

எனினும் மனைவியை பாரக்க வைத்தியசாலை செல்ல வேண்டும் என்பதால் சாரதி அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்க அனுமதிக்குமாறு கணவன் கோரிய நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த பொலிஸார் அவருக்கு கை விலங்கிட்டு வீதியில் வைத்தே கடுமையாகத் தாக்கியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் அங்கு நின்றவர்கள் உடனே அவரை தாக்க வேண்டாம் என தெரிவித்து சாரதி அனுமதிப் பத்திரத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து விபத்திற்கு இலக்கான பெண்ணுடைய கணவரின் சாரதி அனுமதிப் பத்திரத்தையும், மோட்டார்சைக்கிளையும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

பொலிஸாரின் இந்த செயற்பாடு அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.

மனைவி படுகாயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவரை பார்க்க கணவன் செல்வதற்கு முயற்சித்த போது அவரை வீதியில் வைத்து தாக்கியமை குறித்து பலரும் விசனம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.