நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி! சஜித் சற்று முன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஐக்கிய தேசிய கட்சிக்குள் எந்தவொரு நெருக்கடி நிலையும் இல்லையென அமைச்சர் சஜித் பிரேமதாஸ சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் வீட்டில் நடைபெற்று வரும் விசேட செய்தியாளர் சந்திப்பில் சஜித் இந்தத் தகவலை வெளியிட்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தன்னை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு நேற்று கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக முறையில் இந்த விடயம் தொடர்பில் தீர்மானிக்குமாறு கூறினேன். மீண்டும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி இந்த விடயத்தை தெளிவுப்படுத்தவே நான் தீர்மானித்தேன்.

ஐக்கிய தேசிய கட்சி என்பது ஜனநாயக கட்சியாகும். வேறு கட்சிகளை போன்று குடும்பத்தினர், ஒரு தரப்பினர் மற்றும் தங்களுக்கு அவசியமான முறையில் ஐக்கிய தேசிய கட்சி தீர்மானிக்காது.

புரிந்துணர்வு, நட்பு, ஜனநாயகம் போன்றவற்றை கருத்தில் கொண்டே வேட்பாளரை தீர்மானிப்போம். எனவே ஐக்கிய தேசிய கட்சிக்கு உள்ள ஜனநாயகத்தையும், பொது மக்களின் எண்ணங்களையும் முதன்மைப்படுத்தி நாங்கள் தீர்மானம் எடுக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலுக்கான நாட்கள் நெருங்கி வருகிறது. இந்நிலையில் அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வேட்பாளர் தொடர்பான தீர்மானம் வெகு விரைவில் முன்னெடுக்கப்படும் என்பதனை நான் கூறிக்கொள்கின்றேன்.

நான் வேட்பாளராவேன் என்பதில் எனக்கு முழுமையான நம்பிக்கையுள்ளது. பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையிலேயே தேர்தலில் போட்டியிட தீர்மானித்தேன்.

நேற்றைய கடிதத்தில் எனது எண்ணங்கள் மற்றும் விருப்பங்கள் தொடர்பிலேயே குறிப்பிட்டுள்ளேன். யாராக இருந்தாலும் உடனடியாக ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நியமியுங்கள் என்பதே எனது கோரிக்கையாக வைக்கப்பட்டது.

கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இரகசிய வாக்கெடுப்பு ஒன்றிற்கு செல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. வெகு விரைவில் இதற்கான முடிவு வெளியாகும்

கூட்டமைப்புடன் ழுழுமையான சந்திப்பு ஒன்றை நடத்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி யாழப்பாணத்தில் இடம்பெற்ற போது கூட்டமைப்புடன் மேலோட்டமான கலந்துரையாடல்களே மேற்கொள்ளப்பட்டன.

எது எப்படியிருந்தாலும் இறுதியில் நாட்டு மக்களின் கருத்திற்கு செவி சாய்த்து, கட்சியின் தலைவருடன் இணைந்து செயற்படவே விரும்புகிறேன் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.