கொழும்பில் கடத்தப்பட்ட இரட்டை சிறுமிகள்! CCTV காட்சிகள்

கொழும்பில் காணாமல் போன இரட்டை சகோதரிகள் கடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஹிக்கடுவ இரட்டை சிறுமிகள் இருவர் கொழும்பு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளனர். ஹிக்கடுவ பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் ரஷ்மி மற்றும் சித்மி என்ற 14 வயது இரட்டை சிறுமிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

சிறுமிகளின் பெற்றோர் சட்டரீதியாக பிரிந்துள்ள நிலையில், தந்தை ஹிக்கடுவ பிரதேசத்திலும் தாய் பன்னல பிரதேசத்திலும் வசித்து வருகின்றனர். சிறுமிகள் காணாமல் போவதற்கு முன்னர் தனது தந்தையின் அண்ணன் வீட்டில் இருந்துள்ளனர். எனினும் காலை தேடும் போது அவர்கள் வீட்டில் இல்லாமையினால் பெரியப்பா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்று முன்தினம் இருவரையும் பெரியப்பா எச்சரித்தமையினால் அவர்கள் இவ்வாறு வீட்டில் இருந்து சென்றிருக்கலாம் என சந்தேகித்த நிலையில் வீதியில் உள்ள சிசிடீவி கமராவை சோதனையிட்ட போது அவர்கள் கொழும்பு நோக்கி செல்லும் பேருந்தில் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் அவர்கள் தொடர்பில் தகவல் கிடைக்காமல் போயுள்ளது. அவர் தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போது, கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அதில் தாம் அங்கிருந்து செல்வதாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

இதன் பின்னர் கொழும்பு கோட்டையிலுள்ள சிசிடீவி கட்டமைப்பை சோதனையிட்ட போது, கோட்டை ரயில் நிலைய பகுதியில் செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது.

அதன் பின்னர் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறிய சிறுமிகள் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்காத நிலையில் அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும் சிறுமிகள் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.